×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உணவினை ருசிபார்த்த கலெக்டர்: புகார்கள் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உணவு தரமில்லாமல் உள்ளது என்று புகார்கள் எழுந்துள்ளது. அதன் எதிரொலியாக நேற்று கலெக்டர் திடீரென கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உணவினை வரவழைத்து ருசிபார்த்து ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் 5,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,330 பேர் வரையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 61 பேர் வரையில் கொரோனாவால் பலியாகியுள்ளனர். தற்போது வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம் ஆகிய அரசு மருத்துவமனைகள், வாலாஜா அரசு மகளிர் கல்லூரி, ஆற்காடு, கலவை உட்பட 12 கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 1900 பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை மையங்களில் தங்கியுள்ள கொரோனா நோயாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 வேளை உணவு மற்றும் தேநீர், சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு புகார்கள் சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பார்சல்களில் ஒன்றினை அலுவலகத்திற்கு கொண்டுவருமாறு கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார். இதையடுத்து ஒரு உணவு பார்சல் கொண்டுவரப்பட்டது. பின்னர் பார்சலில் இருந்த உணவினை சாப்பிட்டு ருசிபார்த்து ஆய்வு செய்தார். அந்த உணவு தரமானதாக இருந்தது.

இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கும் பணியினை மேற்பார்வையிடும் அதிகாரிகளிடம், உணவு தரமில்லை என புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து அனுப்பினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : corona patients ,district ,Collector ,Ranipettai , Ranipettai, corona patient, food tasting collector
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்