குலசேகரத்தில் ஜோராக நடக்கும் செம்மண் கடத்தல் காணாமல் போகும் மலைக்குன்றுகள்; வருவாய், காவல்துறை மீது குற்றச்சாட்டு

குலசேகரம்: குமரி மாவட்டம் இயற்கையாகவே சிறிய, பெரிய மலைகள், குன்றுகள் நிறைந்த மாவட்டமாகும். மலைகள் உடைக்கப்பட்டு மலைவளம் அழிந்து வருகின்ற நிலையில், தற்போது செம்மண் கடத்தலால் சிறிய குன்றுகளும் அழிக்கப்பட்டு வருகிறது. காவல் துறை கனிம வளம் கடத்தல், மணல் கடத்தல், செம்மண் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு சிறப்பு படைபிரிவை உருவாக்கி சில மாதங்களில் கலைத்து விடுவதால் இவைகளை தடுக்க முடியாத நிலை தொடர்கிறது. சில நேரங்களில் காவல்துறை மற்றும் வருவாய் துறைகளில் சமூக அக்கறையுடைய அதிகாரிகள் இதனை தடுப்பதில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அவ்வப்போது கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதேபோன்று மலைவளம் நிறைந்த திருவட்டார் தாலுகா பகுதிகளில் 6 மாதங்களுக்கு முன் வரை பொறுப்பிலிருந்த வட்டாட்சியர் சுப்பிரமணியனின் தீவிர நடவடிக்கைகளால் மணல், செம்மண் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவர் மாறுதலாகி சென்ற பின்னர் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. திருவட்டார் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் மணல், செம்மண் கடத்தல் பெருமளவு அதிகரித்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்களாக முடங்கி இருந்த கடத்தல், தற்போது வேகமெடுத்துள்ளது. இரவு 10 மணியிலிருந்து விடியும் வரை  செம்மண் கடத்தல் டெம்போக்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் சிறிய மண்குன்றுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. குலசேகரம் சுற்று வட்டார பகுதிகளில்  மட்டும் 4 நாட்களுக்கு முன் ஒரே நாளில் 6 இடங்களில் 20 டெம்போக்கள், 6 பொக்லைன் எந்திரங்கள்  உதவியுடன் இரவு முழுவதும் செம்மண் கடத்தப்பட்டது.

இது தொடர்ந்தால் விளைநிலங்கள், மலைகுன்றுகள் காணாமல் போகும் சூழல் உள்ளது.வருவாய் துறை, காவல் நிலையங்களை கடத்தலில் ஈடுபடும் கும்பல் தினசரி மாமூல் மூலம் சரிகட்டி விடுவதால் இதற்கு நடவடிக்கை இல்லை. செம்மண் கடத்தல் காரணமாக குலசேகரம் சங்கரன்விளை, சூரியகோடு, கல்லடிமாமூடு போன்ற இடங்களில் மேடான பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான மாத்தூர் தொட்டிபாலம் அருகில் உயர்ந்த  மலைகுன்று சிதைக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் இயற்கை சூழல் பாதிக்கப்படுவதுடன் அருகில் ஓடும் சிற்றார் பட்டணம் கால்வாய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையுள்ளது.   இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக விழிப்படைய வேண்டுமென்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Related Stories: