×

தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பில்லூர் அணை நிரம்பவில்லை...!! நீர்வரத்து குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலை!!!

மேட்டுப்பாளையம்: தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், ஜூலை மாதத்தில் நிரம்ப வேண்டிய பில்லூர் அணை, தற்போது வரை நிரம்பாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதாவது நீர் வரத்து குறைவாகவே இருப்பதால் அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் பவானியாற்றை நம்பி இருக்கும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே தென்மேற்கு மழையானது பருவகாலத்தில் பெய்யாத காரணத்தினால் பவானி ஆற்றில் வரக்கூடிய நீரின் அளவு குறைந்தே காணப்படுகிறது.

அதாவது கடந்த ஆண்டைப்போலவே தற்போதும் ஜூன், ஜூலை மாதங்களில் பவானி ஆற்றில் நீர் வரத்தானது குறைந்தே காணப்படுகிறது. வழக்கமாக பருவமழை காலங்களில் 10 ஆயிரம் கனஅடி முதல் 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வரக்கூடிய இந்த அணையில், தற்போது 500 கனஅடி முதல் 1000 கனஅடி வரை மட்டுமே தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றத்தால் உரிய காலங்களில் பருவமழை பெய்யாமல் வெவ்வேறு மாதங்களில் பெய்வதுதான். இதனால் பவானி ஆற்றின் நீர் வரத்தை நம்பி வாழும் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து அங்குள்ள விவசாயிகள் கூறியதாவது, கடந்த ஆண்டுகளில் விவசாயம் செழிப்பாக இருந்ததால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். தற்போது உள்ள குறைந்தளவு நீர் வரத்தால் விவசாயத்திற்கு போதிய அளவு பாசன வசதி கிடைக்காமல் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது கொரோனா பரவி வரும் சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கையானது  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வறுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் நீர் வரத்தானது குறைந்து காணப்படுவதால் தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக வேதனை அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விரைவில் பில்லூர் அணை நிரம்பினால் மட்டுமே விவசாயம் செழிக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : rainfall ,southwest monsoon ,Billur Dam , Southwest Monsoon, Billur Dam, Irrigation, Farmers
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்...