×

வீட்டைவிட்டு வெளியேறிய மனநலம் பாதித்த கர்ப்பிணிக்கு மருத்துவம் பார்க்க மறுப்பு; துவாக்குடி அரசு மருத்துவமனையில் அவலம்

திருவெறும்பூர்: தஞ்சை கண்டியூரை சேர்ந்தவர் ஷாகுல் (28). லாரி டிரைவர். இவரது மனைவி பெமினா (23). முதுகலை பட்டதாரி. மனநலம் பாதிக்கப்பட்ட பெமினா தற்போது நிறைமாத கர்ப்பிணி. இந்நிலையில் திருச்சி கேகேநகர் இச்சிகாம்பட்டி எம்ஜிஆர் நகரில், தனது தாய் வீட்டிலிருந்த பெமினா நேற்று முன்தினம் திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். அன்று இரவு திருவெறும்பூர் வந்த அவர், ஒருவரிடம் லிப்ட் கேட்டு சென்றபோது மெதுவாக செல் என்று கூறியதால் அவர் கோபத்தில் கணேசபுரம் ரவுண்டானா அருகே கீழே தள்ளிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை பெல் போலீசார் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சென்ற அவர் மருத்துவம் பார்ப்பவர்களை திட்டியதால், அவர்கள் சிகிச்சை பார்க்காமல் அனுப்பி விட்டதாக தெரிகிறது.

இரவு நேரத்தில் பெமினா நடந்தே துவாக்குடி காவல் நிலையம் பக்கம் சென்றபோது, இன்ஸ்பெக்டர் காந்திமதி பார்த்து அறிவுரை கூறி அனுப்பியுள்ளார். பின்னர் கர்ப்பிணி என தெரிந்ததும் அவரை அழைத்து வர சென்றபோது கடையில் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் பெமினா பயந்துபோய், பக்கத்தில் வந்தால் வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். இதனால் அதிர்ச்சியில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வாழவந்தான் கோட்டை தன்னார்வலர் அணிலாவிற்கு தகவல் கொடுத்தார். அணிலா தனது தங்கை பிரியா மற்றும் வக்கீல் சாருமதியுடன் அங்கு வந்தார். அப்போது பெமினா சாலையில் தேங்கிகிடந்த மழைநீரில் விளையாடி கொண்டிருந்தார். பின்னர் காந்திமதி தான் வைத்திருந்த உடைகளை கொடுத்து பெமினாவை மாற்ற வைத்து விசாரித்துபோது தன்னை பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காந்திமதி பெமினாவின் கணவர் ஷாகுல் மற்றும் அவரது தாய் வீட்டிற்கும் தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்த ஷாகுல் உடனே ஆட்டோவில் சென்று பெமினாவை மருத்துவமனைக்கு அழைத்ததற்கு அவர் வர மறுத்து, அரசு மருத்துவமனையில் தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள், அதனால் தனியார் மருத்துவமனைக்கு செல்லலாம் என்றார். இதனால் சாகுல் பெமினாவை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, இவர் அங்கு செய்த குறும்புகளை செல்லில் படம்பிடித்து வைத்து ஷாகுலிடம் காட்டியுள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவுகள் இல்லை. அதனால் உடனே ஸ்கேன் செய்து பாருங்கள் என்று அணிலா மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு மருத்துவ ஊழியர்கள் தங்களிடம் ஸ்கேன் வசதி இல்லை என மறுத்துள்ளனர். அல்ட்ரா ஸ்கேன் செய்தாவது பாருங்கள் என்று ஊழியர்களை கண்டிப்புடன் கூறியதை தொடர்ந்து அல்ட்ரா ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தையின் இதய துடிப்பு மிகவும் குறைவாக இருந்ததால் ஆரம்ப கட்ட சிகிச்சை அளித்து இரவு 11.40 இரவு மணிக்கு கணவருடன் தஞ்சைக்கு அனுப்பி வைத்ததாக துவாக்குடி போலீசார் தெரிவித்தனர்.

Tags : Tuvakkudi Government Hospital ,home , Mental, Pregnant, Medical, Government Hospital
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...