×

கடலூர் அருகே தாழங்குடா கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல்...: 6 தனிப்படைகள் அமைப்பு

கடலூர்: கடலூர் அருகே தாழங்குடா கிராமத்தில் நடந்த மோதல் தொடர்பாக விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் குண்டு உப்பலவாடி கிராமத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் ஊராட்சி தலைவர் மாசிலாமணியின் மனைவி பிரவீனா, மதியழகனின் மனைவி சாந்தி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் சாந்தி வெற்றி பெற்றார். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அடிக்கடி கைகலப்பு, மோதல் நடந்துள்ளன. இதுதொடர்பாக இருதரப்பும் மாறி, மாறி போலீசில் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் மாசிலாமணியின் தம்பி மதிவாணன் நேற்று மர்மமான முறையில் தாழங்குடா கிராமத்தில் உயிரிழந்து கிடந்தார். அவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இதில் ஊராட்சி தலைவர் சாந்தி மற்றும் அவரது கணவர் மதியழகனுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாசிலாமணியின் ஆட்கள், மதியழகன் தரப்பைச் சேர்ந்தவர்களின் 25க்கும் மேற்பட்ட படகுகளில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர். மேலும், தாழங்குடா கடற்கரையோரத்தில் வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகள், வீடுகளைச் சேதப்படுத்தி தீவைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இருசக்கர வாகனங்களும் கொளுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். நிகழ்விடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பதற்றம் தணிக்கப்பட்டது. இந்த நிலையில்,  தாழங்குடா கிராமத்தில் நடைபெற்ற மோதல்  தொடர்பாக விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார். மோதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வருவாய் துறையினர், மற்றும் மீன்வளத்துறையினர் கணக்கெடுக்கும் பணியை துவங்கியுள்ளனர். மோதல் தொடர்பாக 60க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : village ,parties ,Cuddalore ,personnel organization , Cuddalore, talankuta, animosity, conflict, single
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...