×

குடியிருப்பு பகுதியில் கழிவுநீரை விடுபவர்கள் மீது நடவடிக்கை கோரி முகப்பேரில் பொதுமக்கள் போராட்டம்

அண்ணாநகர்: முகப்பேர் கிழக்கு குடியிருப்பு பகுதியில் கழிவுநீரை வெளியேற்றும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சமீப காலமாக தினமும் நள்ளிரவில் சிலர் லாரியில் கழிவுநீரை கொண்டு வந்து இங்குள்ள குடியிருப்பு பகுதியில் வெளியேற்றி வருகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதி மக்கள் சுகாதார கேட்டில் தவித்து வருகின்றனர்.  இதுகுறித்து மாநகராட்சி 7வது மண்டல அதிகாரியிடம் பலமுறை இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. முகப்பேரில் குடியிருக்கும் அமைச்சர் பெஞ்ஜமினிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரி கோஷம் எழுப்பினர்.  தகவலறிந்து வந்த நொளம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியலிங்கம் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம், என்றனர். இதனால், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : area ,protest ,house , Residential area, sewer, public, struggle
× RELATED கண்டன ஆர்ப்பாட்டம்