×

சோதனை ஓட்டமாக அண்ணாநகரில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

சென்னை: அண்ணாநகரில் சோதனை ஓட்டமாக ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது, என காவல் துறை அறிவித்துள்ளது.  
இதுகுறித்து சென்னை காவல் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* சென்னை அண்ணாநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா ஆர்ச் மற்றும் அண்ணாநகர் ரவுண்டானா இடையே உள்ள வழித்தடம் சோதனை ஓட்டமாக ஒரு வார காலத்திற்கு மாற்றப்படுகிறது.
* கிரசன்ட் சாலை மற்றும் 3வது நிழற்சாலையை இணைக்கும் ‘ஏ’ பிளாக் மூன்றாவது தெரு நாளை முதல் ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. அண்ணாநகர்  ரவுண்டானாவில் இருந்து அண்ணா ஆர்ச் நோக்கி செல்லும் வாகனங்கள் ‘ஏ’ பிளாக் 3வது தெருவில் இடது புறமாக திரும்புவது தடை செய்யப்படுகிறது.
* சாந்தி காலனி சிக்னல் சந்திப்பில், 4வது நிழற்சாலையில் இருந்து ‘ஏ’ பிளாக் மூன்றாவது தெரு செல்வதும், அண்ணா ஆர்ச்சில் இருந்து சாந்தி காலனி சிக்னல் சந்திப்பில் ‘யு’டர்ன் செய்து ‘ஏ’ பிளாக் 3வது தெருவில் இடது புறமாக திரும்புவதும் தடை செய்யப்படுகிறது.
* கிரசன்ட் சாலையில் இருந்து ‘ஏ’ பிளாக் 3வது தெரு வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கண்டிப்பாக இடது புறம் திரும்பி 3வது நிழற்சாலை வழியாக அண்ணா ஆர்ச் நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.
* கிரசன்ட் சாலையில் இருந்து ‘ஏ’ பிளாக் 3வது தெரு வழியாக வரும் வாகனங்கள் 4வது நிழற்சாலை, அண்ணாநகர் ரவுண்டானா செல்பவர்கள் 3வது நிழற்சாலை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி எதிரில் ‘யு’டர்ன் எடுத்து வர வேண்டும்.
* அண்ணாநகர் ரவுண்டானாவில் இருந்து கிரசன்ட் சாலை செல்லும் வாகனங்கள், 3வது நிழற்சாலையில் ‘ஏ’ பிளாக் 5வது தெருவில் இடது புறமாக திரும்பி ‘ஏ’ பிளாக் 11வது தெரு, 7வது குறுக்கு தெரு (மேற்கு) வழியாக கிரசன்ட் சாலையை அடையலாம்.
* அண்ணா ஆர்ச்சில் இருந்து கிரசன்ட் சாலை செல்ல மூன்றாவது நிழற்சாலை வழியாக வரும் வாகனங்கள், அண்ணாநகர் ரவுண்டானா சந்திப்பில் ‘யு’டர்ன் செய்து 3வது நிழற் சாலையில் ‘ஏ’ பிளாக் 5வது தெருவில் இடது புறமாக திரும்பி ‘ஏ’ பிளாக் 11வது தெரு, 7வது குறுக்குதெரு (மேற்கு) வழியாக கிரசன்ட் சாலையை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Traffic change ,Anna Nagar ,Police announcement , Anna Nagar, Traffic, Police Department
× RELATED அண்ணாநகர் தொகுதி திமுக எம்எல்ஏக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி