×

குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் மறியல்: போலீசாருடன் தள்ளுமுள்ளு

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம் 82வது வார்டுக்கு உட்பட்ட மேனாம்பேடு பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு முறையான வடிகால் வசதி இல்லாததால் சிறு மழை பெய்தால் கூட மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதி மற்றும் அங்குள்ள காலி இடங்களில் தேங்கும் நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதுபோன்ற நேரங்களில் அதிகாரிகள் தற்காலிகமாக பொக்லைன் இயந்திரம் மூலம் தேங்கிய கழிவு நீரை வெளியேற்றுவார்கள். ஆனால், நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லை.

 இந்நிலையில், கடந்த சில தினங்களாக அம்பத்தூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேனாம்பேடு பகுதி குடியிருப்புகளை மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியது. நேற்று முன்தினம் இரவும் அங்கு கனமழை பெய்ததால், வீடுகளை கழிவுநீர் சூழ்ந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை மேனாம்பேடு சர்வீஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால், பிரச்னைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண்பதாக உறுதியளித்தால் தான் கலைந்து செல்வோம், என கூறினர்.

இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போலீசார் போராட்டத்தில் பங்கேற்ற 5க்கும் மேற்பட்ட வாலிபர்களை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது, பொதுமக்கள் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். தகவலறிந்து அம்பத்தூர் மண்டல செயற்பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Tags : removal ,protest , Apartments, Sewerage, Public
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...