×

அடுக்குமாடி குடியிருப்பில் பெட்ரோல் குண்டு வீசிய கல்லூரி மாணவன் கைது: பல்லாவரம் அருகே பரபரப்பு

பல்லாவரம்: பழைய பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெட்ரோல் குண்டு வீசிய கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். பழைய பல்லாவரம், பி.வி. வைத்தியலிங்கம் சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. விஜயகுமார் (25) என்பவர் இங்கு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர், நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டிகளிடம், ‘‘என்னுடைய நண்பர்கள் வருவார்கள், அவர்கள் அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும்,’’ என்று கூறியுள்ளார்.

அதற்கு செக்யூரிட்டிகள் அனுமதி மறுக்கவே, அவர்களிடம் விஜயகுமார்  தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் காவலாளிகளை ஆபாசமாக பேசி, சரமாரியாக தாக்கத் தொடங்கினார். இதை பார்த்த குடியிருப்புவாசிகள் இரு தரப்பையும் தடுத்து, விஜயகுமாரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.  இதையடுத்து கோபத்துடன் மாடியில் உள்ள வீட்டிற்கு சென்ற விஜயகுமார், தனது அறையில் இருந்து மூன்று பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி அதில் (ஆட்டோ பாம்) எனப்படும் பட்டாசை கொளுத்தி மேலிருந்து கீழே வீசி வெடிக்க செய்துள்ளார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது கீழே குழந்தைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்ணும், குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பயங்கர சத்தம் கேட்டதால் குடியிருப்பில் இருக்கும் அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே வந்து பார்த்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லாவரம் போலீசார், விஜயகுமார் அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் தலைமறைவானது தெரிய வந்தது. மேலும் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து 15க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் சுற்றித்திரிந்த விஜயகுமார், அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாட்டிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில், அவரின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.  விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த விஜயகுமாரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர்.Tags : College student ,apartment College student ,apartment , Apartment, petrol bomb, college student, arrested, Pallavaram
× RELATED ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை