×

அதிமுகவில் கூடுதல் நிர்வாகிகள் அறிவிப்பு எதிரொலி: இரண்டு சமுதாயத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் என நிர்வாகிகள் குமுறல்

முக்கிய சமூக தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டதால் கடும் அதிருப்தி

சென்னை: அதிமுகவில் கூடுதல் நிர்வாகிகள் அறிவிப்பில் 2 சமுதாயத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற சமூக தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டதால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பித்தபோது அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வந்தார். அதன்பின்னர் 2001ம் ஆண்டு ஜெயலலிதா, ராஜிவ்காந்தி மரணத்தால் மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சிக்கு வந்தபோது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுதவாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தென் மாவட்டங்களில் பெரிய அளவில் கலவரங்களும் உருவாகின. அதைத் தொடர்ந்து நடந்த 2001 தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.

 அதன்பின்னர் நடந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் தென் மாவட்டங்களில் அதிமுக பெரிய அளவில் வெற்றியை குவிக்க முடியவில்லை. திமுக மட்டுமே தொடர்ந்து தென் மாவட்டங்களில் வெற்றியை பெற்று வந்தது. அதை தொடர்ந்துதான் கடந்த 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அந்த குறையைப் போக்க வேண்டும் என்பதற்காக மேற்கு மாவட்டங்களில் அதிகமாக அதிமுகவுக்கு வாக்களித்து வந்த ஒரு சமூகத்துக்கு அதிகமாக அமைச்சர் பதவியை வழங்கினார். தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் அமைச்சர்களை வழங்கினார். அதோடு மேற்கு மண்டலங்களில் உள்ளவர்களுக்கு முக்கிய இலாக்காக்களையும் வழங்கினார். அதேநேரத்தில் தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ள தேவேந்திரர்களை திருப்திப்படுத்தும் வகையில் டாக்டர் சுந்தர்ராஜையும், நாடார்களை திருப்திப்படுத்தும் வகையில் செல்லப்பாண்டியன், சண்முகநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கினார்.

மேலும் யாதவர்களை திருப்திப்படுத்த கோகுல இந்திராவையும் அமைச்சராக்கினார். கடந்த 2016 தேர்தலிலும் அனைத்து சமூகத்தினர்களை திருப்பதிப்படுத்தும் வகையில் அமைச்சரவையை அமைத்தார். ஆனாலும், தென் மாவட்டங்களில் நாடார்கள், தேவேந்திரர்கள், யாதவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது தென் மாவட்டங்களில் செல்வாக்காக உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக தலைவரான குளித்தலை கிருஷ்ணராயபுரம் சவுந்திரபாண்டியனை முதல் பொருளாளராக அறிவித்தார். ஜெயலலிதா கைக்கு கட்சி சென்றபிறகு  தேவேந்திரர்கள், நாடார்கள், யாதவர்கள் திமுக பக்கம் முழுமையாக திரும்பினர்.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது கைக்கு கட்சி சென்று விட்டது.

அதில் முக்கியமான பதவிகளில் தென் மாவட்டங்களில் செல்வாக்காக இருக்கும் மற்ற சமூகத்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  7 உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அறிக்க வேண்டும் என்று தேவேந்திரர்கள் போராட்டம் நடத்தி  வந்தனர். தேர்தலுக்காக, பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக அறிவித்தனர். இதனால் தென் மாவட்டங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் அதிமுக அதிக இடங்களில் வென்றது. ஆட்சியையும் தக்க வைத்தது. வெற்றி பெற்ற பிறகு அந்த கோரிக்கையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர்கள் முழுமையாக அதிமுகவுக்கு எதிராக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதிமுகவில் யாதவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால்தான் ராஜ கண்ணப்பன் அங்கிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். இதன் காரணமாகவே  கோகுல இந்திராவும் தற்போது கட்சியில் தீவிர ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியிருக்கிறார் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் நாடார்கள், தேவேந்திரர்கள், யாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் புதிய நிர்வாகிகளை அதிமுக தலைமை அறிவித்தது. அதில் 2 குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் தரப்பட்டுள்ளன. பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை அவர்கள் புறக்கணித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நிர்வாகிகளை நியமிக்க 5 பேர் குழு அமைக்கப்பட்டது. அதில் 4 பேர் 2 சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

இதனால் புதிய நியமனத்தில் மற்ற சமூக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.  தென்காசி மாவட்டத்தில் மட்டும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். எந்த அணியிலும் தலைமைப் பதவி அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் தென்காசி வடக்கு மாவட்டத்தி–்ல 3 சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. அதில் 2 தொகுதிகள் தனித் தொகுதி. ஒரு தொகுதி முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதி. அங்கு தேவேந்திரகுலத்தைச் சேர்ந்தவர் அல்லது முஸ்லிம் ஒருவரை மாவட்டச் செயலாளராக நியமித்திருக்க வேண்டும். ஆனால் தென் மாவட்ட விஐபிதான் தன் சமூகம் சார்ந்தவரை நியமித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
இதனால் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் இந்த சமூக வாக்குகள் அனைத்தும் மொத்தமாக அதிமுகவுக்கு எதிராக மாறும் சூழ்நிலை உருவாகி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


Tags : executives ,announcement ,AIADMK ,Echo , AIADMK, Additional Executives, MGR
× RELATED பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்