×

கடந்த மாதத்தை விட குறைவு ஜூலை ஜிஎஸ்டி வரி 87,422 கோடி வசூல்: மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை

புதுடெல்லி: ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் மொத்தம் 87,422 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மாதத்தின் 90,917 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டு வரும் நோக்கத்தில், அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது முன்மொழியப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) திட்டம், 20 ஆண்டுகளுக்கு பின்பு,  2017ம் ஆண்டு ஜூலை மாதம் மோடி அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி.யின் கீழ் ஒவ்வொரு  மாதமும்  1 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்ய இலக்கு  நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கி வருவாய் குறைந்து, நிதி நெருக்கடி நிலவுகிறது. அத்துடன், வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தையும் அரசு நீட்டித்துள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டின் ஜிஎஸ்டி வருவாயில் பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில், ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் 87,422 கோடியாக வசூலானது. இதில் மத்திய ஜிஎஸ்டி 16,147 கோடி, மாநில  ஜிஎஸ்டி 21,418 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 42,592  கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட  பொருட்கள் மூலமாக 20,324 கோடி, செஸ் வரியாக  7,265 கோடியும்  கிடைத்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வருவாயுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. கடந்த ஜூன் மாதம் 90,917 கோடி வரி வசூலான நிலையில், ஜூலை மாதம் ஜிஎஸ்டி வருவாய் சரிவடைந்துள்ளது. இருப்பினும், கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் வரி செலுத்தாதவர்களில் பெரும்பாலானோர் ஜூன் மாதம் வரி செலுத்தி உள்ளனர். இது தவிர, 5 கோடிக்கு குறைவான வருவாய் உள்ள வரிசெலுத்துவோருக்கு செப்டம்பர் வரை வரி செலுத்துவதில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டு உள்ளதும், வரி வசூல் குறைய காரணமாக இருக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய துறைகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முக்கியத் துறைகள் பற்றி முடிவு செய்யப்படும் என்று ஏற்கனவே கடந்த மே மாதம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ``தற்போது முக்கிய துறைகளை முடிவு செய்வது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த பட்டியல் விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கப்படும். அதன் பிறகு முக்கிய துறைகள் பட்டியல் வெளியிடப்படும். முக்கிய துறைகள் வரையறுக்கப்படும் பட்சத்தில், அந்த துறையில் பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக நான்கு மட்டுமே இருக்கும். இதற்காக  ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் இணைக்கப்படலாம், என்றார்.

Tags : Federal Ministry of Finance , July, GST Tax, Federal Ministry of Finance
× RELATED வருமான வரியில் திருப்பி அளிக்க...