×

கொரோனாவிற்கு சித்தா, ஆயுர்வேதம் சிகிச்சை நல்ல பலனை தருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

புதுக்கோட்டை: ‘கொரோனாவிற்கு சித்தா, ஆயுர்வேதம் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையத்தில் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: அரசு உத்தரவை மீறி கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. இதில் பல மருத்துவமனைகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு கட்டண வசூல் செய்கின்றனர். ஆனால் இதுபோன்ற கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை அடியோடு ஒழிக்க உலக சுகாதார மையம் மற்றும் ஐசிஎம்ஆர் விதிகளுக்கு உட்பட்டுதான் தமிழக அரசு ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்து வருகிறது. பொதுமக்கள் ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்கு வந்தால் உடனடியாக கொரோனா நோயை குணப்படுத்த முடியும். பொதுமக்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வருவதால்தான் சிகிச்சை அளிப்பதற்கு தாமதமாகிறது. எனவே பொதுமக்கள் ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்கு வர வேண்டும். இதுவரை 75,000 நோயாளிகள் சித்தா முறையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு சித்தா, ஆயுர்வேதம் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது. தற்போது 18இடங்களில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. ஆங்கில மருத்துவத்துக்கு இணையாக சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை அரசு ஊக்குவித்து வருகிறது.
 இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Siddha ,Minister Vijayabaskar ,Corona , Siddha to Corona, Ayurvedic treatment, Minister Vijayabaskar
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...