×

திருப்பத்தூர் அருகே பரபரப்பு: கொரோனாவால் இறந்தவர் சடலம் 5 மணி நேரம் ஆம்புலன்சில் கிடந்த அவலம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய யாரும் முன்வராததால் ஆம்புலன்சிலேயே 5 மணி நேரமாக வைத்திருந்த அவலம் நடந்துள்ளது. திருப்பத்தூர் அடுத்த திம்னாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 40வயது வாலிபர். துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தார். சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது.இதையடுத்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வாலிபரின் சடலத்தை சொந்த ஊரான திம்னாமுத்தூர் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபரின் சடலத்தை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை. இதனால் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை ஆம்புலன்சிலேயே அவரது சடலம் வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளரிடம் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும் இந்த சடலம் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பயந்து வீட்டின் உள்ளேயே முடங்கி கிடந்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு தாசில்தார் மோகன் உத்தரவின்பேரில் சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் இறந்த வாலிபரின் சடலத்தை திருப்பத்தூர் மின்மயானத்தில் இரவு 8.15 மணியளவில் அடக்கம் செய்தனர்.


Tags : Tirupati ,Corona ,Tiruppattur , Tiruppattur, Corona, corpse
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...