×

வருவாயில் முறைகேடு செய்ததாக புகார்: சென்னையில் 4 முக்கிய கோயில்களில் ஆய்வு

சென்னை: இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் சென்னை மண்டலத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. இங்கு அன்றாட பூஜை செலவு, ஊழியர்களுக்கான ஊதியம், கட்டிட வாடகை வருவாய், உண்டியல் வருவாய் உள்ளிட்டவை தொடர்பான வரவு, செலவு பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இதை அறநிலையத்துறை ஆய்வு செய்யும்.   இந்த நிலையில் 4 கோயில்களில் வரவு, செலவு விவரங்களில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், கோயில் சொத்துக்கள் தனி நபருக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில், உதவி ஆணையர் கவினிதா, செயல் அலுவலர்கள், தமிழ்செல்வி, நற்சோனை, ராதாமணி, ஆய்வர்கள் ராஜலெட்சுமி, ராமசாமி, விஜயபாஸ்கர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

 அந்த குழுவினர் வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் ஜூலை 30,31, ஆகஸ்ட் 1, திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயிலில் ஆகஸ்ட் 6, 7, 8 ஆகிய தேதிகளிலும், மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோயிலில் ஆகஸ்ட் 10, 12, 13, திருவொற்றியூர் தியாகராஜசுவாமி ேகாயிலில் ஆகஸ்ட் 3,4,5 ஆகிய தேதிகளிலும் ஆய்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், ஆய்வு சரிபார்க்கப்பட்ட விவரம், ஆய்வு குழுவினரால் தெரிவிக்கப்பட்டவுடன் இணை ஆணையரால் ஆய்வறிக்கையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, கோயில் நிர்வாகிகள் ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், ஆய்வு அலுவலர்களுக்கு அனைத்து ஆவணங்களை காட்டவும் சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்பிரியா உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் ஆய்வு செய்வதற்காக உதவி ஆணையர் தலைமையிலான குழுவினர் சென்றுள்ளனர். இந்த குழுவினர் ஆய்வுக்கு வருவார்கள் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில் கோயில் நிர்வாக அலுவலர் மற்றும் ஊழியர்கள் கோயில் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மற்ற 3 கோயில்களிலும் ஆய்வு நடக்குமா, என்ற சந்தேகம் இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



Tags : temples ,Chennai ,Inspection , Revenue Abuse, Chennai, 4 major temples
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு