×

7வது கட்ட ஊரடங்கில் தளர்வு எதிரொலி: ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி: கடைகளை இரவு 9 மணி வரை திறக்க அரசுக்கு கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் நேற்று முதல் 7வது கட்ட ஊரடங்கு தொடங்கியது. இதில் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடவும், டீக்கடைகளில் உட்கார்ந்து டீ குடிக்கவும் அனுமதிக்கப்பட்டது. அதே நேரம் கடைகளை திறக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு அதன் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில்  7வது கட்ட ஊரடங்கு தளர்வில் நேற்று முதல் உணவகங்களில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஓட்டல்களில் சாப்பிடலாம். 7 மணிக்கு பிறகு இரவு 9 மணி வரை ஓட்டல்களில் பார்சல் வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், பொதுமக்கள் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட நேற்று அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ஒரு சிலர் மட்டுமே ஓட்டல்களில் சாப்பிட ஆர்வம் காட்டினர்.

பஸ், ரயில் போக்குவரத்து தொடங்கினால் மட்டுமே, ஓட்டல்களில் சாப்பிட பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று ஓட்டல் உரிமையாளர்கள் கூறினர்.
அதேபோன்று டீக்கடைகளில் நேற்று முதல் சமூக இடைவெளியுடன் உட்கார்ந்து டீ குடிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலானோர் டீக்கடையில் அமர்ந்து டீ, ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிட்டனர். இதனால் கடந்த சில மாதங்களாக வியாபாரம் இல்லாமல் இருந்த டீக்கடை முதலாளிகள் சந்தோஷப்பட்டனர். ஆனாலும், பல டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஊரடங்கு காரணமாக வெளியூர் சென்று விட்டனர். அவர்களுக்கு இ-பாஸ் கிடைக்காததால் மீண்டும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு வர முடியாததால் பல டீக்கடைகள் பூட்டியே கிடக்கிறது.

மேலும் காய்கறி, மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மாலை 6 மணியுடன் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. தற்போது, ஆகஸ்டு 1ம் தேதி (நேற்று) முதல் இரவு 7 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனாலும், வழக்கமாக மாலை 6 மணிக்கு மேல்தான் கடைகளில் வியாபாரம் அதிகமாக இருக்கும் என்பதால், கடை திறந்திருக்கும் நேரத்தை இரவு 9 மணி வரை அல்லது 8 மணி வரையாவது திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 அதேபோன்று நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாக வருமானம் வரும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கவும் நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சாலையோர கோயில்கள் மட்டுமே திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.

Tags : phase ,Echo ,hotels ,government ,shops , 7th Phase Curfew, Hotels, Corona
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...