×

25 சதவீத மாணவர் சேர்க்கை விபரங்களை வெளியிட கோரி மனு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவிகித இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் மற்றும் கால அட்டவணை உள்ளிட்ட விபரங்களை வெளியிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் அதன் மாநில செயலாளர் ஜெ. முகம்மது ரசின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 14 வரையிலான வயதுடையவர்களுக்கு கட்டாய இலவச கல்வி கிடைப்பதற்காக கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 25 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது. அதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி மே 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

 ஆனால், இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் அந்த நடைமுறை கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே பள்ளிகள் மூடப்பட்டு, எப்போது திறக்கப்படும் என முடிவெடுக்கப்படாத நிலை உருவாகி உள்ளது.   இந்த ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் உள்ள இடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என்று தமிழக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. கல்வி கட்டணத்தில் 40 சதவிகிதத்தை வசூலிக்கலாம் என்று ஜூலை 17ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் இடம் கிடைக்கும் என்று நம்பியுள்ள பெற்றோரை சிரமத்தில் ஆழ்த்தி உள்ளது.

எனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவிகித இலவச மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்புவதற்கான நடைமுறைகளையும், கால அட்டவணையையும் தமிழக அரசு வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும். அவற்றை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். கல்வியில் நுழைவு நிலை வகுப்புகளான எல்.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பு இடங்களில் 25 சதவிகித இடங்களை ஒதுக்கிவைக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.



Tags : release ,court , 25 percent of the student enrollment, HC,
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு