×

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காசநோயாளிகள் தங்களை தற்காத்துக்கொள்வது எப்படி?சுகாதாரத்துறை ஆலோசனை

சென்னை: காசநோயாளிகள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: காசநோய் என்பது மைக்கோ பாக்டீரியம் டியுபர் குளோசிஸ் எனும் கிருமியால் உருவாகிறது.  இது நுரையீரலையே அதிகமாக தாக்குகிறது. காசநோய் இரண்டு வகைப்படும். ஒன்று நுரையீரல் காசநோய், மற்றொன்று நுரையீரல் அல்லாத பிற பகுதிகளில் வரக்கூடிய காசநோய். மொத்தமுள்ள காசநோயாளிகளில் 80 சதவீதம் பேர் நுரையீரல் காசநோயாளிகளாக  உள்ளனர். இவர்கள் காசநோயை  பரப்புவதில் மிக முக்கிய காரணியாக உள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு மேற்பட்ட சளி, இருமல், மார்பு வலி,  சளியில் ரத்தம் கலந்து வருதல், உடல் சோர்வு, மாலை நேர காய்ச்சல் மற்றும்  இரவில் வியர்த்தல், பசியின்மை, உடல் எடை குறைதல் ஆகியவை காசநோயின்  அறிகுறிகள். காசநோயாளிகள் இருமும் போதும்,  தும்மும் போதும் வெளிவருகிற திரவத் துளிகளை  ஆரோக்கியமான நபர் ஒருவர்  சுவாசிக்கும் போது, காசநோய் கிருமி நுரையீரலை சென்றடைகிறது. இந்த கிருமி காசநோயை உடனடியாக  உருவாக்கி விடுவதில்லை. மாறாக, அந்த நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, அவருக்கு காசநோய் பாதிப்பு உருவாகலாம். முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள தவறிவிட்டால் 10லிருந்து 15  புதிய காசநோயாளிகளை ஒரு வருடத்திற்குள் உருவாக்கி விடுவார்.

கை குலுக்குவதாலோ, பொதுக் கழிப்பறையை பயன்படுத்துவதாலோ, உணவுப் பண்டங்கள்,  பாத்திரங்களைப் பரிமாறிக் கொள்வதாலோ, ரத்த பரிமாற்றம் செய்வதினாலோ, சகஜமாக பழகுவதினாலோ பரவுவதில்லை. கொரோனா தொற்று  நுரையீரலையே  அதிகமாக பாதிக்கிறது. கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்கள் நோயைப் பரப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுள்ள ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் இந்த கிருமியை பரப்புகிறார்கள். இந்த கிருமி கலந்துள்ள காற்றை சுவாசிக்கும் ஆரோக்கியமான நபரின் நுரையீரலில் இத்தொற்று ஏற்படுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா நோயாக மாறிவிடும். சளி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, மூச்சுத் திணறல் போன்றவை கோவிட் 19ன் அறிகுறிகள்.

நெருக்கமான பகுதிகள் மற்றும் காற்றோட்டம் இல்லாத இடங்களில் வசிக்கிறவர்களுக்கு காசநோய் மற்றும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், எச்ஐவி நோயாளிகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், போதை மருந்திற்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், காசநோயாளிகள் ஆகியோர் கொரோனா நோய் தொற்றுக்கு எளிதில் ஆளாகக்கூடும். காசநோய் மற்றும் கொரோனா நோயை சர்க்கரை நோயாளிகளிடையே கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அவ்வாறு காசநோயாளிகள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கிடையே சர்க்கரை நோயை கண்டறிந்து கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.

இதனால்தான், கண்டறியப்பட்ட அனைத்து காசநோயாளிகள் மற்றும் கொரோனா தொற்று உள்ளவர்களிடம் சர்க்கரை நோய் உள்ளதா என்று பரிசோதிக்கப்படுகிறது. அவ்வாறு அவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அதற்குரிய சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் காசநோய் மற்றும் கொரோனா நோய்களுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அதற்குரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.காசநோய் மற்றும் கொரோனா இரண்டும் காற்றின் மூலம் பரவும் என்பதால் வாயில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அல்லது இருமும் போதும், தும்மும் போதும் வாயில் துணி வைத்துக் கொள்ள வேண்டும். கண்ட இடங்களில் சளி, எச்சிலை துப்பக் கூடாது. சளியை ஒரு டப்பாவில் துப்பி, குழி தோண்டி புதைத்து விட வேண்டும்.

ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து காற்றோட்டத்திற்கு வழி வகுக்க வேண்டும். வெளியில் சென்று வீட்டிற்கு வந்தபின் சோப்பு நீரால் கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சளி பரிசோதனை, நுண்கதிர் எக்ஸ்ரே பரிசோதனை, சிபிஎன்ஏஏடி போன்ற பரிசோதனைகள் மூலமாக காசநோயைக் கண்டறியலாம். அதேபோல கொரோனோ தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்கு முதலில் தெர்மல் பரிசோதனை மூலம் உடல் வெப்பநிலை கண்டறியப்படுகிறது.  மேலும் இத்தொற்றை கண்டறிய பிசிஆர் பரிசோதனையும், நுரையீரல் பாதிப்பைக் கண்டறிய நுண்கதிர் பரிசோதனையும் செய்யப்படுகிறது. காசநோய் மற்றும் கொரோனா நோய்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும் காசநோயாளிகள் கொரோனா தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள, சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையின் 1800 120 555550 என்ற இலவச சேவை எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 104 மற்றும் 044-2951 0400, 044-2951 0500 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் 94443 40496, 87544 48477 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : TB , Corona, tuberculosis, health department
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை