×

வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு: நகைகள், பொருட்களை எடுக்கக்கூடாது: ஐகோர்ட்டில் ஜெ.தீபா வழக்கு

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றவும், அங்குள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை எடுக்கவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:   வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையா சொத்துக்கள் அனைத்தும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சட்ட பூர்வ வாரிசான எங்களை கேட்காமல் சென்னை கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  ஜெயலலிதா மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் வழக்கில் சம்மந்தப்பட்ட இடத்தை அரசு தன்வசம் எடுத்துக்கொள்வது ஆணையத்தின் விசாரணையை முழுவதுமாக அழித்துவிடும்.
  வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் நில ஆர்ஜித அதிகாரி எடுத்துவிடக்கூடாது என்று கோரி தமிழக அரசுக்கு கடந்த ஜூன் 12ம் தேதி மனு அனுப்பினேன். இந்நிலையில், ஜூன் 29ம் தேதி உயர் நீதிமன்றம் என்னை ெஜயலலிதாவின் சொத்துக்களுக்கு நிர்வாகியாக நியமனம் செய்தும், 6 மாதங்களுக்குள் ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவரது கடன்கள் ஆகியவற்ைற கண்டறிந்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் கூறியிருந்தது.

இதையடுத்து, நானும் எனது கணவர் மாதவன் மற்றும் எனது சட்ட பூர்வ பிரதிநிதிகளும் போயஸ் கார்டன் இல்லம் சென்று சொத்துக்களை ஆய்வு செய்ய அனுமதி கேட்டு தென் சென்னை ஆர்டிஓவிடம் மனு கொடுத்தோம். அதற்கு அனுமதி தரப்படவில்லை. உயர் நீதிமன்றத்தில் நான் கொடுத்த உத்தரவாதத்தை அமல்படுத்தவேண்டும். அதுமட்டுமல்லாமல் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வரும் நிலையில் வேதா நிலையத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய தேவை எழவில்லை.

 ஜெயலலிதாவின் உயர்ந்த மதிப்புள்ள நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பது ஏற்கத்தக்கதல்ல. ஏற்கனவே, ஜெயலலிதா வைத்திருந்த முக்கிய ஆவணங்கள், தாள்களை அழிப்பதற்காக கோடநாட்டில் கொலை சம்பவம் அரங்கேறியதும் செய்திகளாக வந்தன. இந்த சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசும் சம்மந்தப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு மிக குறைந்த காலமாக உள்ளதால் வேதா நிலையத்தின் சொத்துக்களை பணமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.  எனவே, வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவில்லமாக மாற்றும் தென் சென்னை டிஆர்ஓவின் ஜூலை 22ம் தேதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : memorial house ,Vedha ,station ,Jayalalithaa ,J.Deepa ,court ,J Deepa ,Vedha Center , Vedha Nilayam, Jayalalithaa Memorial House, Materials, iCourt, J.Deepa case
× RELATED வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில்...