×

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை 90 சதவீத நகைப்பட்டறைகள் மூடல்: பல்லாயிரம் தொழிலாளர்கள் மாற்றுத்தொழிலுக்கு படையெடுப்பு

சேலம்: தங்கம், வெள்ளியின் விலை உயர்வால் தமிழகம் முழுவதும் 90 சதவீத நகைப்பட்டறைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரம் தொழிலாளர்கள்,  மாற்றுத் தொழிலுக்கு சென்றுவிட்டதாக நகைப்பட்டறை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் விவசாயம், ஜவுளி, கட்டுமானத்திற்கு அடுத்தபடியாக வெள்ளி, தங்க நகை செய்யும் தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நகைப்பட்டறைகள் உள்ளன.  இந்த பட்டறைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவியதால் தங்க நகை செய்யும் பட்டறைகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பட்டறைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் வேலையிழந்து, போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மின்னல் வேகத்தில் எகிறி வரும் தங்கம், வெள்ளி  விலை உயர்வால் அவை சார்ந்த உற்பத்தி பட்டறைகள் மூடப்பட்டுள்ளனர். இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்.  மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டதாக நகைப்பட்டறை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  நகை தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் மணிகண்டன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தங்க நகை பட்டறைகள் உள்ளது. இந்த பட்டறைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆரம், அட்டிகை, நெக்லஸ், வளையல், செயின், கம்மல், மோதிரம், பேன்சி நகைகள் என பல வகைகளில் நகைகள், பட்டறைகளில் தயாரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து பட்டறைகள் மூடப்பட்டுள்ளது. 2 மாதமாக வேலை இல்லாமல் பல்லாயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் 5ம் கட்ட ஊரடங்கில் சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதித்தது. இதன்பின்னர் ஒரு சில நகைப்பட்டறைகள் செயல்பட தொடங்கின. இந்த பட்டறைகளிலும் உற்பத்தி செய்ய போதியளவு நகைகள் வரவில்லை. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே வேலை கிடைத்து வந்தது. இந்த நிலையில், தங்கம் விலை கடந்த 4 மாதத்தில் பவுனுக்கு 11 ஆயிரம் அதிகரித்துள்ளது. புதியதாக தங்கக்கட்டிகள் எதுவும் வரவில்லை.  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலை உயர்வாலும், வரத்து இல்லாததாலும்  90 சதவீத தங்க நகை பட்டறைகள் மூடப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தொழில் அழியும் அபாயமும் உள்ளது. இவ்வாறு மணிகண்டன் கூறினர்.

விலை உயர்வால் வெள்ளி  தொழிலுக்கும் கடும் பாதிப்பு  
வெள்ளி கைவினையாளர்கள் கூறுகையில், ‘‘சேலத்தில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவால் வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய வெள்ளிக்கட்டிகள் வரவில்லை. கொரோனாவுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளி ₹40 ஆயிரம் முதல் 45 ஆயிரத்திற்கு விற்றது. 4 மாதத்தில் ஒரு கிலோ வெள்ளி 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விலை அதிகரித்து, தற்போது ₹63 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரை விற்கிறது. வெள்ளி விலை உயர்வால் வியாபாரிகள் யாரும் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டவில்லை.  இதனால் வேலை இழந்த தொழிலாளர்கள் மாற்று ெதாழிலுக்கு சென்றுவிட்டனர்,’’ என்றனர்.

Tags : jewelry stores ,tens of thousands ,Invasion , Gold, silver, price
× RELATED ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு...