×

என்னை அடிக்க அதிகாரம் கொடுத்தது யார்? போலீஸ் ஸ்டேஷனில் படுத்து நியாயம் கேட்ட குடிமகன்: சேலத்தில் ருசிகரம்

சேலம்: மதுகுடித்தவரை விரட்டியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர், என்னை அடிக்க அதிகாரம் கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பி ஸ்டேஷனில் படுத்துக்கொண்டு நியாயம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் டவுன் ரயில்வே ஸ்டேசன் எதிரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுவாங்கும் ஆசாமிகள், ரோட்டில் நின்றும், வீடுகளின் முன்பு கூட்டமாக அமர்ந்தும் மதுகுடித்து வருகின்றனர். நேற்று முன்தினம், அங்குள்ள ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்து, சிலர் கூட்டமாக  மது குடித்தனர்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில், அங்கு வந்த டவுன் போலீசார், குடிமகன்களை அப்புறப்படுத்தினர். சிறிது நேரத்தில் மீண்டும் வந்த அந்த கும்பலை, போலீசார் மறுபடியும் விரட்டினர். 3வது முறையாகவும் போலீசார் வந்த போது, அதிலிருந்த வாலிபர் ஒருவர் போதையில், சும்மா சும்மா வந்து விரட்டுவது சரியல்ல. நிம்மதியாக மதுகூட குடிக்க கூடாதா? என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கோபமடைந்த போலீசார், அவரை அடித்து விரட்டினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு அந்த வாலிபர், டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். போதையில் இருந்த அவர், என்னை அடிப்பதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அடித்ததற்கு விளக்கம் அளிக்கவில்லை என்றால் இங்கேயே சாவேன். என்னை கொன்று விடுங்கள்’’ என கூறி ஸ்டேஷன் வாசலில் படுத்துக்கொண்டார்.

அவரை போலீசார் எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. பின்னர், அந்த வாலிபரின் தாயை அழைத்து வந்த போலீசார், மகனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறினர். அவரும் என் மகனை ஏன் அடித்தீர்கள் என கேள்வி கேட்டார். ‘‘ உங்களது மகனை அடித்தது யார்? எந்த போலீஸ் என அடையாளம் காட்டினால், நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்றனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, மகனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து அவர்  புறப்பட்டு சென்றார். இதுகுறித்து கமிஷனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் யாரையும் அடிக்க வேண்டாம், எச்சரிக்கை செய்து அனுப்புங்கள்  என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.



Tags : Salem ,Citizen ,police station , Justice, citizen, Salem
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...