×

பிஆர்பிக்கு எதிரான கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து விலக நீதிபதி மறுப்பு

மதுரை: பிஆர்பிக்கு எதிரான கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து விலக நீதிபதி மறுத்து விட்டார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரியது தொடர்பான இரு வழக்குகளில் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோரை மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி கடந்த 29.3.2016ல் விடுதலை செய்தார்.

மேலும் அவரது உத்தரவில், அப்போதைய மதுரை கலெக்டர் அன்சுல்மிஸ்ரா உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், அப்போதைய கலெக்டர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை கலெக்டர் தரப்பில் ஐகோர்ட் கிளையில் இரு அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்கள் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பிஆர்பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கிரானைட் முறைகேடு தொடர்பான முந்தைய வழக்குகளில், தற்போதைய நீதிபதியும், அப்போதைய அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்த நீங்கள், (நீதிபதி பி.புகழேந்தி) அரசுத்தரப்பில், ஆஜராகி வழக்கை நடத்தியுள்ளீர்கள். எனவே, இவ்வழக்குகளை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, தற்போது இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு எனக்கு தரப்பட்டுள்ளது. இதனால் இவ்வழக்கு என் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அரசு சிறப்பு வழக்கறிஞராகவும், கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் இருந்தபோது அரசு சார்பில் ஆஜரானதால் இவ்வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகிக்கொள்ளுமாறு எதிர்மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கேட்பதை ஏற்க முடியாது.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் வழக்குளை விசாரிக்கும் நீதிபதிகளை, வழக்கறிஞர்கள் முடிவு செய்யும் நிலை ஏற்படும். இதுதொடர்பாக வழக்கின் எதிர் மனுதாரர்களுக்கு அரசுத்தரப்பில் நோட்டீஸ் அனுப்ப வேண்டுெமன உத்தரவிட்டு, விசாரணையை ஆக.6க்கு தள்ளிவைத்தார்.



Tags : Judge ,BRP Judge , பிஆர்பி,கிரானைட் முறைகேடு ,நீதிபதி
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...