×

மொரப்பூரில் சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்: முழுமையாக கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

அரூர்: தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், பால் ஊற்றி வருகின்றனர். இதனிடையே, கொரோனா ஊரடங்கால், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலின் அளவை குறைக்கும்படி, தர்மபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனால், லிட்டருக்கு 100 மில்லி வீதம் பால் திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால் தினமும் 5 லிட்டர், 10 லிட்டர் பால் ஊற்றும் விவசாயிகள், ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்புகின்ற பாலை வீதி,வீதியாக சென்று விற்பனை செய்ய வேண்டி உள்ளது.

இந்நிலையில் நேற்று, தர்மபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து, மொரப்பூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், பால் ஊற்றும் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திரண்டனர். அப்போது, முழுமையாக பாலை வாங்க வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன், பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பால் சாலையில் ஆறாக ஓடி வீணானது.


Tags : road ,Morappur , Morappur, road, farmers struggle
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...