×

சொப்னாவுடன் தமிழக தங்க கடத்தல் கும்பலுக்கு தொடர்பு: சென்னையில் என்ஐஏ அதிரடி விசாரணை: குருவிகள், சுங்கத்துறை அதிகாரிகள் கலக்கம்

சென்னை:  கேரளா தங்க கடத்தல் ராணி சொப்னாவுக்கும் தமிழக தங்க கடத்தல் கும்பலுக்கும்  உள்ள தொடர்பு பற்றி விசாரிக்க என்ஐஏ பெண் அதிகாரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் டெல்லியிலிருந்து  சென்னை வந்தனர். அவர்கள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்த குருவிகள் கலக்கம் அடைந்துள்ளனர். கேரளாவை போல் தமிழகத்திலும்  தங்க கடத்தல் கும்பல் சிக்க அதிகளவில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் பெரும் அரசியல் புயலை வீசிக்கொண்டிருக்கும் தங்கம் கடத்தல் விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் சிறப்பு புலனாய்வு பிரிவான என்ஐஏவின் பார்வை தமிழகம் நோக்கியும் திரும்ப உள்ளதாக  கடந்த 3 தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் என்ஐஏ அதிகாரி டிஐஜி வந்தனா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை டில்லியிலிருந்து  விமானத்தில்  சென்னை வந்தனர். இவர்களின் வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. என்ஐஏ குழுவினர் வந்தவுடன் உடனடியாக சென்னை விமான நிலையம் மற்றும் சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறைகளில் அதிரடியாக விசாரணையில் இறங்கினர். கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் பெரிய அளவில் பிடிப்பட்ட கடத்தல் தங்கம், அதோடு விமான நிலையம் மற்றும் விமான  கழிவறைகள், சீட்டுகள், குப்பை தொட்டிகளுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த தங்கம் ஆகியவற்றின் விசாரணை ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

மேலும் 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை, திருச்சி விமான நிலையங்களில் கடந்த 2019ம் ஆண்டுகளில் பெரிய அளவில் நடந்த தங்கம் கடத்தல் சம்பவங்கள் பற்றியும், அந்த கடத்தல்களில் கைதானவர்கள், அவர்களின் பின்னணி பற்றியும் ஆய்வு செய்வதாக கூறப்படுகிறது. மேலும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் அதிகமான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்த பல வழக்குகளின் ஆவணங்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அந்த வழக்குகளில் கைதானவர்கள், தலைமறைவானவர்களின் முழு விபரங்களை என்ஐஏ சேகரித்துள்ளது. அதைத் ெதாடர்ந்து அவர்களை ஜாமீனில் எடுத்தவர்கள் யார்? யார்? அவர்கள் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தனர் என்பது பற்றியெல்லாம் விசாரிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக என்ஐஏ குழுவினர் சென்னையை அடுத்து திருச்சிக்கும் செல்ல இருக்கின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் தங்கம் கடத்தல் குறித்து என்ஐஏவின் ஒரு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அதே தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழகத்திற்கும் என்ஐஏ குழுவினர் தற்போது வந்து புலன் விசாரணையை துவக்கி உள்ளனர். இது தமிழகத்தில் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. இரண்டு கடத்தல் வழக்கிலும் உள்ள ெதாடர்புகள் குறித்து இரண்டு குழுவினரும் கலந்தாலோசித்து விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் சென்னை வந்த என்ஐஏ குழுவிற்கு தலைமை ஏற்றுள்ள பெண் அதிகாரி வந்தனா, ஏற்கனவே சென்னை விமானநிலைய குடியுரிமை பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர். எனவே அவருக்கு சென்னை விமான நிலையத்தை பற்றி முழுமையாக தெரியும். இது சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் கும்பல் மற்றும் குருவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  

இதற்கிடையே சென்னை விமானநிலையம், சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை ஆகியோரிடம் சேகரித்த தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன்  என்ஐஏ குழுவின் ஒரு பிரிவினர் நேற்று பகலில் சென்னையிலிருந்து விமானத்தில் கேரளா மாநிலம் கொச்சி சென்றுள்ளனர். அங்கு சொப்னா சுரேஷ் குழுவினரிடம் விசாரணை நடத்தும் என்ஐஏ குழுவினருடன் இணைந்து வழக்கு குறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதில் தமிழகத்தில் நடந்த தங்கம் கடத்தல் சம்பவங்களுக்கும், சொப்னா சுரேஷ்க்கும் எந்த அளவு தொடர்பு உள்ளது என்பதுபற்றி தீவிரமாக விசாரிக்க உள்ளனர். அதைத்தொடர்ந்து சொப்னா சுரேஷ்சிடம் மீண்டும் விசாரணை நடத்தவும் வாய்ப்பு உள்ளது.  என்ஐஏவின் அதிரடி நடவடிக்கையால் தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களிடம் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

தப்பிக்க வழி தேடும் சொப்னா கும்பல்: தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னா, சந்தீப் நாயரை என்ஐஏவும், சுங்க இலாகாவினரும் காவலில் எடுத்து விசாரித்தனர். தங்கம் கடத்தலுக்கு ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரி ராஷித் காமிஸ் அல்சலாமி உடந்தையாக இருந்தார் என இருவரும் தெரிவித்தனர். ராஷித் காமிஸ் அல்சலாமி மீது இருவரும் புகார் கூறி இருந்தாலும், வெளியுறவுத்துறை சட்டப்படி அவரிடம் இந்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துவதில் சிக்கல் உள்ளது. தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்திடம் அனுமதி கேட்டால் விசாரணை தாமதமாக வாய்ப்பு உள்ளது.

உபா சட்டப்படி பதிவு செய்யப்பட்ட வழக்கில் 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைத்துவிடும். தீவிரவாத குழுக்களின் தலையீடு இருப்பதாக கருதப்படும் இந்த வழக்கில், தங்களது அதிகாரிகளை இந்திய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் அனுமதிக்க வாய்ப்பு இல்லை. இந்தியாவால் அவர்களை விசாரணைக்கு ஆஜராக கட்டாயப்படுத்தவும் முடியாது. இதை தெரிந்து ைவத்துதான் சொப்னா கும்பல், அமீரக தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என கூறுவதாக அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால் இந்த கும்பல் தயாரித்த ஐக்கிய அரபு அமீரக தூதரக சீல்கள், அரசு முத்திரைகள், தூதரக ெலட்டர்-பேடுகளை வழக்கின் முக்கிய ஆதாரமாக பயன்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

வங்கி லாக்கர் எடுக்க உதவிய சிவசங்கர்
சொப்னாவுக்கு திருவனந்தபுரம், கொச்சி உட்பட பல்வேறு இடங்களில் வங்கி கணக்குகளும், ரகசிய லாக்கர்களும் உள்ளதை என்ஐஏ கண்டுபிடித்தது. கடந்த வாரம் ஒருசில லாக்கர்களை திறந்து பரிசோதித்தபோது ஒரு கோடிக்கு மேல் பணமும், ஒரு கிலோவுக்கு அதிகமான தங்க நகைகளும் இருந்தன. விசாரணையில், ஒருசில லாக்கர்கள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் ஆடிட்டர் மற்றும் சொப்னாவின் பெயரில் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த ஆடிட்டரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தபோது சிவசங்கர் கூறியதால்தான் சொப்னாவுக்கு லாக்கர் எடுக்க உதவியதாக தெரிவித்துள்ளார். இது உண்மையாக இருந்தால், வழக்கில் இது முக்கிய ஆதாரமாக இருக்கும் என கருதப்படுகிறது.


சொப்னா, சந்தீப்புக்கு  ஆக. 21 வரை சிறை
சொப்னாவையும், சந்தீப் நாயரையும் காவலில் எடுத்து விசாரித்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களது காவல் முடிவடைந்ததால் நேற்று காலை கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவரும் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை, திருச்சியில் விசாரணை
சென்னை விமான நிலையத்ைத பொறுத்தவரை கடந்த ஆண்டு ஒரே மாதத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினரும், சுங்கத்துறையினரும் 4 வழக்குகளில் 74 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த 4 வழக்குகள் குறித்து விசாரிப்பதற்கு என்ஐஏ முக்கியத்துவம் தந்துள்ளது. மேலும் திருச்சி விமானநிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை மிகப்பெரிய அளவிலான தங்கம் பிடிப்பட்டது.

மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சுமார் 15 நாட்கள் திருச்சி விமான நிலையத்திலேயே முகாமிட்டு பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களையும் என்ஐஏ விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : NIA ,Tamil Nadu ,Chennai ,customs officials , Copna. Tamil Nadu Gold Smuggling, Chennai, NIA, Sparrows, Customs
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...