×

டாக்டரும் இல்ல... 108ம் வரல... கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை இறந்தது: நாகை ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

நாகை: நாகை அருகே பிரசவம் பார்க்க டாக்டர் இல்லாததால் பிறந்த குழந்தை இறந்ததால் ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை அருகே வடுகச்சேரி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அருள்தாஸ் மனைவி மகாலட்சுமி (21). கர்ப்பிணியான இவரை, பிரசவத்துக்காக வடுகச்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று சேர்த்தனர். அப்போது அங்கு டாக்டர் இல்லாததால், நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு பணியில் இருந்தவர்கள் கூறினர். இதையடுத்து மகாலட்சுமியை நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அங்கிருந்த உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர்.

ஆனால் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வர காலதாமதமானதால் காரில் மகாலட்சுமியை நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது வடுகச்சேரி அருகே நரியங்குடி என்ற இடத்தில் வாகனத்திலேயே மகாலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் நாகை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு மகாலட்சுமி மற்றும் குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த மகாலட்சுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் கிடைத்ததும் கீழையூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் ராமசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனி வருங்காலங்களில் வடுகச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் நியமிப்பது மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் எப்போதும் தயாராக இருக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மகாலட்சுமியின் உறவினர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : birth ,doctor ,baby ,Relatives ,Naga Primary Health Center ,Naga , Pregnant, newborn baby, died
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...