×

கர்நாடக மாநிலத்தில் விதிமீறல் திருமணத்தால் விபரீதம்!: ஒரே கிராமத்தை சேர்ந்த 70 பேருக்கு தொற்று பாதித்ததால் அதிர்ச்சி..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட திருமணத்தால் தொற்று ஏற்பட்டு ஒரு கிராமமே முடக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்தவே தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பலர் அரசின் உத்தரவை மீறி திருமணம், இறுதி சடங்கு உள்ளிட்டவற்றில் அதிகளவில் கூடுகின்றனர். இதனால் பல விபரீதங்கள் நிகழ்கின்றது.

இந்நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட திருமணத்தால் 70 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ராய்ச்சூர் மாவட்டம் தலைமறினா கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற திருமணத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்த கிராமத்தில் உள்ள பலருக்கும் காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. இதனையடுத்து திருமணத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து மற்ற கிராமங்களுக்கும் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தலைமறினா கிராமம் மூடப்பட்டுள்ளது. அந்த கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுப்பதற்காக 10 சுகாதாரத்துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நோயின் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் மருத்துவமனையிலும் மற்றவர்கள் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags : village ,Karnataka ,state ,marriage disaster , State of Karnataka, Irregular Marriage, Disaster
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...