×

கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தம்; மானாமதுரை அருகே பரபரப்பு

மானாமதுரை: மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழமேல்குடி கிராமத்தின் கண்மாய்க்கு வைகையாற்றிலிருந்து தண்ணீர் வரும் வகையில் பாசன கால்வாய் உள்ளது. இதன்மூலம் கீழமேல்குடியில் உள்ள 500 ஹெக்டேர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் கிராமத்தினர் குடிவரி ஏற்படுத்தி சொந்த செலவில் கால்வாயை தூர்வாரி மழைகாலங்களில் வைகையில் வரும் வெள்ளநீரை தங்களது கண்மாய்க்கு கொண்டு சென்று விவசாயம் செய்கின்றனர். இந்தாண்டு வழக்கம்போல தூர்வாரும் பணியினை துவங்கியபோது கால்வாயினை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக இக்கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கீழமேல்குடி ஊராட்சி மன்றதலைவர் தர்மாராமு, துணைத்தலைவர் அர்ச்சுனன், திமுக நகர்கழக செயலாளர் பொன்னுசாமி, பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி ராஜாங்கம், அமமுக ஒன்றிய செயலாளர் நெப்போலியன், முத்து, முருகன் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் வைகையாற்றிலிருந்து கீழமேல்குடி கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயை தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.

அப்போது பிரச்சனைக்குரிய பகுதியிலும் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு தூர்வாரப்பட்டது. தகவலறிந்து வந்த மானாமதுரை போலீசார் கால்வாய் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தினர். பிரச்னைக்குரிய கால்வாய் பகுதியில் தூர்வாரக்கூடாது என கிராமமக்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கிராமமக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் மானாமதுரை வட்டாட்சியர் வந்தபின் பேசி தூர்வாரும் பணியை மேற்கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கீழமேல்குடி கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Manamadurai , Canal, dredging work, Manamadurai
× RELATED மதுரை-மானாமதுரை இடையே ரயில்பாதை மின்மயமாக்கும் பணிகள் தீவிரம்