×

வேலூர் மாநகராட்சியில் தயாராகும் இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசம்: கமிஷனர் சங்கரன் தகவல்

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் தயாராகம் இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தெரிவித்தார். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி, சத்துவாச்சாரி, வேலூர், சேண்பாக்கம் உள்ளிட்ட 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வீடுகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், இறைச்சி கூடங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளை முறையாக கையாளும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டது. மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்து அகற்றும் விதமாக அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் எம்சிசி ஷெட்கள் அமைக்கப்பட்டன. குப்பைகளை தரம்பிரிக்கும் பணியில் மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மக்கும் தன்மை கொண்ட இலை, தழைகள் உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் சிமென்ட் தொழிற்சாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் பேக்கிங் செய்யப்பட்டு 1கிலோ ₹1க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த இயற்கை உரத்திற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. விவசாயிகள், மாடித் தோட்டம் வைத்துள்ளோர் அதிகளவில் பயனடைந்தனர். இந்நிலையில், மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இயற்கை உரம் விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம், என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட காட்பாடி காந்திநகரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை கமிஷனர் சங்கரன் நேற்று ஆய்வு செய்தார். உதவி கமிஷனர் செந்தில், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோரிடம்  தயாரிக்கும் பணிகள் குறித்து விளக்கமளித்தனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பான முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுமாறு கமிஷனர் பணியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன் கூறுகையில், வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 40 இயற்கை உரம் தயாரிக்கும் கிடங்கும் இயங்கி வருகின்றனர். இதில், 500க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நவீன இயந்திரம் மூலமாக மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்து அகற்றப்படுகிறது. மக்கும் தன்மைகொண்ட குப்பைகள் தொட்டியில் 40 முதல் 60 நாட்களுக்கு பதப்படுத்தி உரமாக மாற்றப்படுகிறது. சுமார் 50 டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இயற்கை உரம் தேவையுள்ள விவசாயிகள் மண்டல அலுவலகத்தில் கடிதம் கொடுத்து இயற்கை உரத்தை இலவசமாக விவசாயிகள் பெற்று பயன்பெறலாம் என்றார்.


Tags : Commissioner ,Vellore Corporation , Vellore Corporation, Natural Fertilizer, Free
× RELATED கீழடியில் அகழ் வைப்பகம் தொல்லியல் ஆணையர் ஆய்வு