சிப்பிகுளம் கடல் பகுதியில் மீன்பாடு குறைவால் வெறும் வலையுடன் திரும்பும் மீனவர்கள்; கடனை அடைக்க முடியாமல் திணறல்

குளத்தூர்: சிப்பிகுளம் கடல்பகுதியில் நாளுக்குநாள் மீன்பாடு குறைந்து வருவதால் மீனவர்கள் வெறும் வலையுடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடனை அடைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள சிப்பிகுளம் மற்றும் கீழவைப்பார் மீனவ கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் அப்பகுதி மக்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாகவே மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்பாடு வரத்து மந்தமாகவே உள்ளது. இந்நிலையில் வாரத்திற்கு மூன்று முறை கடல்தொழிலுக்கு செல்லும் மீனவர்கள், வலையில் மீன்கள் சிக்காமல் பெரும்பாலான மீனவர்கள் வெறும் வலையுடனே ஏமாற்றத்துடன் கரை திரும்புகின்றனர். ஒரு சில மீனவர்கள் வலையில் சாலை, ஊளி, முறல் போன்ற குறைந்த அளவிலான மீன்கள் மட்டுமே பிடிபடுகிறது.

ஊளி கிலோ ரூ350க்கும், முறல் ரூ250க்கும், 10 கிலோ கொண்ட ஒரு கூடை சாலை ரூ1100க்கு ஏலம் போனது. குறைந்த அளவில் மீன்பாடு உள்ளதால் நாட்டுப்படகுகளுக்காக கடன் பெற்ற மீனவர்கள் தற்போது அப்பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறும்போது, ‘கடந்த சில மாதங்களாகவே மீன்பாடுகள் இன்றி மீன்பிடித்தொழில் பெரும் நஷ்டத்துக்குள்ளாகவே உள்ளது. மேலும் கடந்த 5 மாதங்களாக கொரோனா தொற்று ஊரடங்கால் மீனவர்கள் வருமானமின்றி வீட்டு செலவிற்கு வட்டிக்கு பணம் வாங்கி செலவு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடலுக்கு செல்வதென்றால் குறைந்தது ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்துதான்  செல்லமுடியும். ஆனால் மீன்வரத்து ஆயிரம் ரூபாய்க்கு கூட இல்லாமல் கை நட்டமே மிஞ்சுகிறது. இதை விட்டு விட்டு வேறு தொழிலுக்கு செல்லவும் வழியில்லை. படகுக்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்கவும் வழியில்லாமல் உள்ளது’ என வேதனையுடன் கூறினர்.

Related Stories:

>