×

டோக்கன் வழங்கியும் கொள்முதல் செய்யாததால் நெல்மணிகள் மழையில் முளைத்தது; விவசாயிகள் கவலை

திருவாரூர்: திருவாரூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 10நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து முளைத்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 75 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் 6 லட்சத்து 91 ஆயிரம் மெ. டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது முன்பட்ட குறுவை அறுவடை நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டு சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் தற்போது வரையில் தண்ணீர் பஞ்சம் இல்லாததால் மாநிலம் முழுவதும் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் வழக்கமாக நாளொன்றுக்கு கொள்முதல் நிலையங்களில் 800 மூட்டைகளுக்கு பதில் ஆயிரம் மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரே நேரத்தில் விவசாயிகள் அறுவடை செய்து வருவதன் காரணமாக அனைத்து நெல்லும் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகிறது.

அதன்படி திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா வடமட்டம், கீழவயலூர், பரவாக்கரை உட்பட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதலுக்காக அடுக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டும் கடந்த 10 நாட்களாக கொள்முதல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழை காரணமாக இந்த நெல் மூட்டைகள் அனைத்தும் முளைப்புத்திறன் ஏற்பட்டு அழுகும் நிலை இருந்து வருகிறது. எனவே நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழகத்தின் துணை மேலாளர் ரெங்கநாதனிடம் கேட்டபோது, நாளொன்றுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் வீதம் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் விவசாயிகள் அறுவடை நடை பெற்றுள்ள நிலையில் டோக்கன்கள் வழங்கப்பட்டாலும், அதற்கு ஏற்ப அவர்களது வீடுகளில் நெல் மூட்டைகளை வைத்து எடுத்து வராமல் நேரடியாக களத்திலிருந்து கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து அடுக்கும் நிலையில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக எதிர்பாராமல் பெய்த மழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனையும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உடனடியாக கொள்முதல் செய்வதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Tags : Tokens, purchases, gems, farmers
× RELATED யானை தாக்கி விவசாயி பலி