×

கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: ஊரடங்கு நேரத்திலும் வாகனங்கள் நீண்ட அணிவகுப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் ராட்சத மரம் விழுந்து சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோழா அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த மழை காரணமாக பகல் 12 மணியளவில், கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் வாழைகிரி அருகே ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.

தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர், வனத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின் மதியம் 3 மணியளவில் ராட்சத மரம் வெட்டி அகற்றப்பட்டது. இதனால் கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கொரோனா தடுப்பு ஊரடங்கால் ஏற்கனவே சுற்றுலாப்பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு வாகனங்கள் கொடைக்கானலுக்கு எதற்காக செல்கின்றன? அத்தியாவசிய பொருட்கள் சென்றால் கூட இத்தனை வாகனங்கள் தேவையில்லை. அனைத்து வாகனங்களிலும் பயணிப்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதா? முறையாக அனுமதி பெற்று பயணிக்கின்றனரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : road ,Kodaikanal - Giant ,curfew ,procession , Kodaikanal, Vattalakundu, traffic damage
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...