×

நாடு முழுவதும் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்: சிறப்பு தொழுகை நடத்தி இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி..!!!

சென்னை: நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு,  இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஓர் ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்ட அந்தக்  குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல், பால்யப் பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரைத் தனக்குப் பலியிடுமாறு, கடவுள், இப்ராஹிம் அவர்களுக்குக் கனவின் மூலம் கட்டளையிட்டார்.

இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிடத் துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி, இறைவன் அதைத் தடுத்தார். மேலும், ஓர் ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்குப்  பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார். மேற்கூறிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே, இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளைப் பலியிட்டு, பக்ரீத் பண்டிகை கொண்டாடுகின்றனர். உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலையிலேயே டெல்லியில் புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் பெருமளவுக்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.  மசூதிக்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவிப்பது  இஸ்லாமியர்கள் வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கட்டி தழுவாமல் சமூக இடைவெளியை கடைபிடித்து வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை 7-ம் கட்டமாக ஊடங்கு நீட்டித்தபோதும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, இஸ்லாமிய சகோதர்கள், தங்களது வீடுகளில் இருந்தே தொழுகை  நடத்தினர். இதனைபோல், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனது இல்லத்தில் தொழுகை நடத்தினர்.  

தலைவர்கள் வாழ்த்து:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இறைவனின் கட்டளைக்குப் பணிந்து நடப்பதே வாழ்வின் மகத்தான நெறி என்பதை உணர்த்தும் பக்ரீத் என்னும் தியாக திருநாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மனம் கனிந்த பக்ரீத் திருநாள்  நல்வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.  பாமக நிறுவனர் ராமதாஸ்: தியாகத்தைப் போற்றும் புனித திருநாளான பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகள். மதிமுக பொது செயலாளர் வைகோ: சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு  மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

பக்ரீத் திருநாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று, வாழ வாழ்த்துகள். திருமாவளவன் (விசிக தலைவர்): ஈகத்தையும் இறை நம்பிக்கையையும்  இணைத்துக் கற்பிக்கும் கருத்தியலை  அடிப்படையாக கொண்டிருக்கும் பெருவிழாவே பக்ரீத்.  இதுபோல, அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, சமக தலைவர் சரத்குமார், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்திய  ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, திருநாவுக்கரசர் எம்பி, வசந்தகுமார் எம்பி, மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன்,

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், திராவிட மனித சங்கிலி தலைவர் செங்கை  பத்மநாபன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்- தேசிய தலைவர் ஹென்றி உள்ளிட்ட தலைவர்களும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சுயசுகாதார பாதுகாப்புகளுடன் பக்ரீத் கொண்டாட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து: சிறப்புத் தொழுகை, ஈகை ஆகிய இரண்டையும் பக்ரீத் பண்டிகை தினத்தில் இரு கண்களாக பாவித்து- நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு  சிறப்பும், பெருமையும் சேர்க்கும்  இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்த தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும்- இந்த தருணத்திற்குரிய சுய சுகாதாரப் பாதுகாப்புகளுடனும் கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி, எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்  கொள்கிறேன்.

Tags : celebrations ,Eid-ul-Fitr Eid-ul-Fitr ,country ,Islamists , Eid-ul-Fitr Eid-ul-Fitr celebrations across the country: Islamists are happy to perform special prayers .. !!!
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!