×

பிளஸ்1 தேர்வு முடிவு வெளியீடு: மொத்த தேர்ச்சி 96.04 சதவீதம்

சென்னை: பிளஸ்1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மாணவர்களை விட மாணவியர் 3.11 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளன.  தமிழகத்தில் பள்ளிகளில் பிளஸ் 1 படித்து வரும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடந்தது. தேர்வு எழுத பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 30 ஆயிரத்து 654 பேர் பதிவு செய்தனர். அவர்களில் பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 15 ஆயிரத்து 442 பேர் தேர்வு எழுதினர். அதில் மாணவியர் 4 லட்சத்து 35 ஆயிரத்து 881 பேர், மாணவர்கள் 3 லட்சத்து 79 ஆயிரத்து 561 பேர். பொதுப்பாடப் பிரிவின் கீழ் 7 லட்சத்து 63 ஆயிரத்து 424 பேரும், தொழிற்பாடப் பிரிவின் கீழ் 52 ஆயிரத்து 18 பேரும் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. மொத்த தேர்ச்சி வீதம் 96.04 சதவீதம். மாணவியர் 97.49 சதவீத தேர்ச்சியும், மாணவர்கள் 94.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 3.11 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வில் தமிழகத்தில் மொத்தம் 7249 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில் 2716 மேனிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளன. பிளஸ் 1 தேர்வில் கோவை மாவட்டம் 98.10 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. விருதுநகர் மாவட்டம் 97.90 சதவீதம் பெற்று 2ம் இடத்தில் உள்ளது.

கரூர் மாவட்டம் 97.51 சதவீதம் பெற்று 3வது இடத்தில் உள்ளது. பிளஸ் 1 தேர்வில் 2819 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதியதில் 2672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்1 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக தேர்வுத்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் நேற்று முன்தினமே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் 31ம் தேதி காலையில் பள்ளிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், காலை 9.45 மணிக்கு பிறகு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச் சொற்களை பயன்படுத்தி இணைய தளத்தில் இருந்து மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல, 3 இணைய தள முகவரிகளை கொடுத்த தேர்வுத்துறை அவற்றில் இருந்து, மாணவர்களும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தது.

இந்த அறிவிப்பின்படி நேற்று காலை 9.30 மணிக்கு பிறகு மாணவர்கள் இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முயற்சித்தனர். ஆனால், தேர்வுத்துறை குறிப்பிட்ட இணைய தளங்கள் ஏதும் செயல்படவில்லை. நீண்ட நேரம் முயற்சித்த மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியாமல் சோர்ந்து போனார்கள். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகே இணைய தளத்தில் சர்வர்கள் வேலை செய்தன. அதற்கு பிறகே மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். இதையடுத்து, பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல் பெறுவதற்கும், மறு கூட்டல் செய்வதற்கும் விண்ணப்பிக்கும் தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பாடவாரியான தேர்ச்சி வீதம்
அறிவியல் பாடப் பிரிவுகள்    96.33%    
வணிகவியல் பாடப்பிரிவுகள்    96.28%    
கலைப் பாடப்பிரிவுகள்    94.11%    
தொழிற்பாடப் பிரிவுகள்    92.77%   


Tags : Plus 1 selection, release
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...