×

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவு

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 80.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் எழுத்தாளர் சா.கந்தசாமி. 1968ம் ஆண்டு ‘சாயாவனம்’ என்ற புதினத்தின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1998ம் ஆண்டு ‘விசாரணை கமிஷன்’ என்ற நாவலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. எழுத்து மட்டும் இல்லாமல் குறும்படங்கள், ஆவணப்படங்கள் போன்றவற்றை இயக்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 1989ம் ஆண்டு இவர் இயக்கிய காவல் தெய்வங்கள் ஆவணப்படம் சைப்ரஸ் விழாவில் முதல் பரிசு பெற்றது.

 உடல்நலக்கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.  மு.க.ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘‘சாயாவனம் என்ற புதினத்தின் வாயிலாக தமிழ் இலக்கிய உலகில் சாகாவரம் பெற்ற படைப்பாளி-சாகித்ய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைகிறேன்.

எழுத்து என்பது வெற்று அலங்காரத்திற்கானதல்ல என்பதையும், அது காலம், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படுத்தப்படும் தடைகளை உடைத்தெறியும் படைப்பாயுதமாக இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படையாக அறிவித்து, அதன்படியே படைப்புகளை வழங்கியவர் சா.கந்தசாமி. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கிய அன்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

 தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Tags : S. Kandasamy Death of Sahitya Akademi Award ,senior writer , Sahitya Akademi Award, Senior Writer, S. Kandasamy, Deceased
× RELATED 'சாகித்ய அகாடமி'விருது பெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி காலமானார்!