×

இன்று பக்ரீத் பண்டிகை முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி: திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளான அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இறைவனின் கட்டளைக்குப் பணிந்து நடப்பதே வாழ்வின் மகத்தான நெறி என்பதை உணர்த்தும் பக்ரீத் என்னும் தியாக திருநாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மனம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழிவந்தவர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம், ஏகத்துவம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ்: தியாகத்தைப் போற்றும் புனித திருநாளான பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகள். மதிமுக பொது செயலாளர் வைகோ: சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பக்ரீத் திருநாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற்று, வாழ வாழ்த்துகள். திருமாவளவன் (விசிக தலைவர்): ஈகத்தையும் இறை நம்பிக்கையையும்  இணைத்துக் கற்பிக்கும் கருத்தியலை அடிப்படையாக கொண்டிருக்கும் பெருவிழாவே பக்ரீத்.  இதுபோல, அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, சமக தலைவர் சரத்குமார், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, திருநாவுக்கரசர் எம்பி, வசந்தகுமார் எம்பி, மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன்,

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், திராவிட மனித சங்கிலி தலைவர் செங்கை பத்மநாபன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்- தேசிய தலைவர் ஹென்றி உள்ளிட்ட தலைவர்களும் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சுயசுகாதார பாதுகாப்புகளுடன் பக்ரீத் கொண்டாட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து: சிறப்புத் தொழுகை, ஈகை ஆகிய இரண்டையும் பக்ரீத் பண்டிகை தினத்தில் இரு கண்களாக பாவித்து- நபிகள் நாயகத்தின் போதனைகளுக்கு  சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்த தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும்- இந்த தருணத்திற்குரிய சுய சுகாதாரப் பாதுகாப்புகளுடனும் கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி, எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : leaders ,Chief Minister ,Bakreed ,festival , Greetings to Bakreed Festival, Chief Minister, Leaders
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...