டிராவல்ஸ் நிறுவனம் மூலம் 4 ஆயிரத்துக்கு இ-பாஸ் விற்பனை: மதுரையில் அதிகாரிகள் தீவிர விசாரணை

மதுரை:  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் வரும் ஆக.31 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆன்லைன் மூலம் இ-பாஸ் பெற்றுச்செல்ல வேண்டும். கொரோனா தொற்று அதிகம் பரவுவதால், திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய 3 காரணத்திற்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப்படுகிறது.    மதுரை மாவட்டத்தில் டிராவல்ஸ் நடத்தி வரும் ஒரு சிலர், அவசர தேவைக்கு இ-பாஸ் பெற்றுத்தருவதாக கூறி, வாட்ஸ் அப் மூலம் விளம்பரம் செய்து ரூ.4 ஆயிரம் வீதம் வசூல் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விரும்பும் பலர், மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையுடன் டிராவல்ஸ் நடத்தி வரும் ஒருவரை அணுகி இ-பாஸ் வாங்கித்தர கேட்கின்றனர்.

இதற்கு அவர் ஆதார் கார்டு நகல் மற்றும் சென்னை செல்ல ரூ.4 ஆயிரம் பெற்றுக்கொண்டு, அரை மணி நேரத்தில் இ-பாஸை ஆன்லைன் மூலம் வாங்கித் தருகிறார். கோவைக்கு செல்ல  வேண்டுமென்றால் ரூ.1,250 பெற்றுக்கொள்கிறார். இதுபோன்று மதுரையில் பல இடங்களில் இ-பாஸ் பெற்றுத்தருவதாக  வாட்ஸ் அப்பில் செல்போன் எண்ணுடன் தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிறது.   பொதுவாக இ-பாஸ் பெறுவதில், பொதுமக்கள்  அவதிப்படும் நிலையில், டிராவல்ஸ் நிறுவனம் மூலம் எப்படி விரைவாக இ-பாஸ் பெறப்படுகிறது? இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையா என சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்

இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘ தற்போது தகவல் கிடைத்துள்ளது. விசாரணை நடத்த உள்ளோம்’’ என்றனர்.  இதுகுறித்து சமூக ஆர்வலர் கனகவேல்பாண்டியன் கூறுகையில், ‘‘இ-பாஸ் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ள நிலையில், பலர் முக்கியமான நிகழ்வில் கூட கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், இதுபோன்று பணம் பெற்று புரோக்கர் மூலம் டிராவல்ஸ் நிறுவனத்தார் இ-பாஸ் வழங்குவது முறைகேட்டிற்கு வழிவகுத்துள்ளது. எனவே இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>