×

பெற்றோரால் செல்போன் வாங்கித்தர முடியாததால் சோகம்: ஆன்லைனில் படிக்க முடியாத ஏக்கத்தில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

பண்ருட்டி: பெற்றோரால் செல்போன் வாங்கித்தர முடியாததால், ஆன்லைனில் பாடங்களை படிக்க முடியாத ஏக்கத்தில் 10ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் விக்‌னேஷ் (15). இவர் கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்காக விக்னேஷ் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணம் இல்லை எனக்கூறி வாங்கித் தரவில்லை என தெரிகிறது.  இதனால் மனம் உடைந்த  அவர் கடந்த 29ம்தேதி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து  கொண்டார்.

மகளுக்கு செல்போன் வாங்கி தரமுடியாததால் தாய் தற்கொலை: கோவை வடவள்ளி கருப்பராயன் கோயில் வீதியை சேர்ந்தவர் ரமணி (37). டிரைவர். இவரது மனைவி கலைவாணி (32). இவரது மகள் 10ம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக ஸ்மார்ட் போன் வாங்கித் தரும்படி கலைவாணியிடம் மகள் கேட்டுள்ளார். அவர் தனது கணவரிடம் மகளுக்கு செல்போன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு, ஊரடங்கு காலத்தில் போதிய வருமானம் இல்லை. ஊரடங்கு முடிந்த பின்னர் செல்போன் வாங்கித் தருவதாக ரமணி கூறி உள்ளார்.

இதனால், மகளுக்கு செல்போன் வாங்கி தரமுடியாத ஏக்கத்தில், நேற்று முன்தினம் கலைவாணி வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் வகுப்புகளை படிக்க செல்போன் கிடைக்காத ஏக்கத்தில் மாணவனும், மகளுக்கு செல்போன் வாங்கி தர முடியாக வேதனையில் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Tags : student ,parents ,suicide , Parent, online, 10th grade student, suicide
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...