×

இந்தியாவில் நாச வேலைக்கு சதி தூதரக பார்சலில் தீவிரவாத பிட் நோட்டீஸ்? என்ஐஏ தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: தூதரக  பார்சலில் தங்கம் கடத்தியது போல தீவிரவாத குழுக்களுக்கு பிட்  நோட்டீஸ்களும், கை புத்தகங்களும் வந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி  உள்ளது.   திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக  தூதரக பார்சலில் தங்கராணி சொப்னா தங்கம் கடத்தியதாக சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கேரளாவுக்கு 300 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் தங்கம் கடத்தியது போல தீவிரவாத கும்பல்களின் பிட்  நோட்டீஸ்கள், கை புத்தகங்களும் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று  என்ஐஏவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இவைகளில் தீவிரவாத செயல்பாடுகள்,  இந்தியாவில் நடத்த வேண்டிய நாசவேலை குறித்தும் தகவல் இடம் பெற்று  இருக்கலாம் என்று என்ஐஏ சந்தேகிக்கிறது. இதுகுறித்து என்ஐஏ தீவிர  விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய நபர்களில்  ஒருவரான ரமீஸை காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து  விசாரித்து வருகின்றனர். தங்கத்தை வாங்குபவர்கள்  யார்? கேரளாவில் அதற்கான பணத்தை திரட்டுவது யார்? இதை ஹவாலா பணமாக மாற்றி  துபாய்க்கு கொண்டு செல்வது எப்படி? என்பன குறித்து என்ஐஏ அவரிடம் துருவித்துருவி விசாரித்து  வருகிறது. சொப்னா, சந்தீப் நாயருக்கு  திருவனந்தபுரம், ெகாச்சி உள்பட பல்வேறு இடங்களில் நண்பர்கள் அதிகமாக  உள்ளனர். இவர்களில் பலர் தங்கம் கடத்தலுக்கு உதவியுள்ளனர். என்ஐஏ அவர்களை   ரகசியமாக கண்காணித்து வருகிறது.  

சொப்னா கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த கணவர்  ஜெய்சங்கர் மற்றும் 2 குழந்தைகள் என்ஐஏ கண்காணிப்பில்  இருந்தனர். நேற்று முன்தினம் மூவரும் விடுவிக்கப்பட்டனர். தங்கம் கடத்தல்  குறித்து எதுவும் தெரியாது என்று ஜெய்சங்கர் கூறி உள்ளார். அதை என்ஐஏ  நம்பாததால் மீண்டும் விசாரிக்கலாம் என்று தெரிகிறது.

சிவசங்கர் பண பரிவர்த்தனை சேகரிப்பு
ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர்ஆடிட்டரிடம் நேற்று முன்தினம் சுங்க இலாகா   விசாரணை நடத்தியது. பல மணிநேரம் நடந்த விசாரணையில் சிவசங்கர் கடந்த  சில ஆண்டுகளில் மேற்கொண்ட பண பரிவர்த்தனை குறித்த முழு விபரங்கள்  கிடைத்ததாக கூறப்படுகிறது.

தூதரக அதிகாரிக்கு தொடர்பு
சொப்னாவிடம்  என்ஐஏ விசாரித்தபோது, தங்க கடத்தல் குறித்து திருவனந்தபுரம் ஐக்கிய அரபு  அமீரக தூதரக அதிகாரி(அட்டாஷே) ராஷித் காமிஸ் அல்சலாமிக்கு  நன்றாக தெரியும். ஒவ்வொரு முறை கடத்தும்போதும்,  டாலர்களில் அவருக்கு பணம் கொடுத்ததாகவும்  திருவனந்தபுரத்தில் உள்ள ஏஜென்டிடம் இந்திய ரூபாயை டாலராக மாற்றி  கொடுத்ததாகவும் ெசாப்னா கூறினார். இதையடுத்து சுங்க  இலாகாவினர் அந்த ஏஜென்டிடம் விசாரணை நடத்தினர். அதில் முக்கிய தகவல்  கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கம் கடத்தலில்  ராஷித்  காமிஸ் அல்சலாமிக்கும் தொடர்பு இருப்பதை சுங்க இலாகா உறுதி செய்துள்ளது.  அட்டாஷேவிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதியை கோரவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

6 முறை துபாய் பயணம்
என்ஐஏ காவலில் உள்ள ரமீஸ் அதிகாரிகளிடம் கூறியதாவது: ெசாப்னாவும், சந்தீப்  நாயரும் அடிக்கடி துபாய் வருவதுண்டு. கடந்த ஆண்டு இருவரும் 6 முறை  துபாய் வந்துள்ளனர். அப்போது என்னையும், பைசல் பரீதையும் சந்தித்து  பேசினர். தங்கம் கடத்தல் குறித்து நாங்கள் விவாதித்தோம். தூதரக பார்சலில்  தங்கம் கடத்த அனைத்து வசதிகளையும் தான் செய்து தருவதாக சொப்னா என்னிடம்  உறுதியளித்தார். அவர் கொடுத்த தைரியத்தால்தான் தூதரக பார்சலில் தங்கத்தை  அனுப்ப தீர்மானித்தோம்.

இடமாற்றத்துக்கு எதிர்ப்பு
தங்கம் கடத்தல் வழக்கை முதலில் விசாரித்த சுங்க இலாகா இணை ஆணையாளர் அனீஷ் பி.ராஜன் திடீரென நாக்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.  சொப்னா  கும்பலை விசாரித்து வந்த அதிகாரியின் திடீர் மாற்றத்துக்கு அந்த  துறையிலேயே சிலர் எதிர்ப்பு ெதரிவித்துள்ளனர். கொச்சி சுங்க இலாகா ஆணையாளரிடம் அவர்கள் தங்கள் எதிர்ப்பை  தெரிவித்ததாக கூறப்படுகிறது.


Tags : India ,NIA ,investigation , India, sabotage, extremist bit notice, NIA
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...