எம்மா... எப்பா... இவ கள்ளக்காதல் செய்யறா...இளம் பெண்ணின் தோளில் கணவனை அமரவைத்து ஊர்வலம் நடத்திய மக்கள்: கட்டை, டயரால் அடித்து கொடூரம்

ஜபுவா: கிராமங்களில் நடக்கும் ‘நாட்டாமை பஞ்சாயத்து’களால், நாட்டில் பல்வேறு கொடுமைகள் பரவலாக நடக்கின்றன. அதுவும், கள்ளக்காதல் என்று வந்து விட்டால், பலப்பல தண்டனைகள்... மொட்டை அடிப்பது. கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மீது ஊர்வலம் நடத்துவது, மரத்தில் கட்டி நாள் முழுவதும் தர்ம அடி கொடுப்பது, இதன் உச்சமாக நிர்வாண ஊர்வலம் நடத்துவது.... இவை எழுதப்படாத கிராமத்து சட்டங்கள். இதில், ஆணுக்கொரு நியதியும், பெண்களுக்கு ஒரு நியதியும் கூட உண்டு. ஆணாக இருந்தால், ‘அவனுக்கு என்னய்யா ஆம்பிள... சரி சரி... பஞ்சாயத்துக்கு அபராதம் கட்டிட்டுப் போ...’ என்பார்கள். பெண்ணாக இருந்தால், நடப்பதே வேறுதான்...

இப்படிப்பட்ட ஒரு சம்பவம், மத்திய பிரதேசம், ஜபுவா மாவட்டத்தில் உள்ள சப்பாரி ரன்வாசா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது.

 இக்கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஜீத்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது). குஜராத்துக்கு வேலை தேடி சென்றார். அங்கு, ஒரு இளம்பெண்ணின் நட்பும் கிடைத்தது. அவரையே திருமணமும் செய்தார். 3 ஆண்டுகள்  குஜராத்திலேயே ‘குப்பைக் கொட்டினார்.’ கடந்த வாரம் திடீரென மனைவியுடன் சொந்த கிராமம் திரும்பினார். மனைவிக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘ஏன், எதுக்கு...?’ என்று கேட்டதற்கு, ‘வாயை மூடிக்கிட்டு வா...’ என்றார்.கிராமத்துக்கு வந்ததும் தனது பெற்றோரிடம், ‘‘எம்மா... எப்பா... இவ இருக்காளே... குஜராத்துல நான் வேலைக்கு போனதும் வேற ஒரத்தனோடு சேர்ந்து கூத்தடிக்கிறா...’ என்று வத்தி வைத்தார்.

அவ்வளவுதான், அவர்கள் பேயாட்டம் ஆடினர். அப்பெண்ணை அடித்து வெளுத்தனர். கிராமம் முழுவதும் தகவல் பரவியது. பெரும் கூட்டம் கூடியது. அவர்களும் அப்பெண்ணை அடித்து, உதைத்தனர். இறுதியாக, ஜீத்துவை அப்பெண்ணின் தோளில் அமர வைத்து, தெருத்தெருவாக ஊர்வலம் அழைத்துச் சென்றனர். அப்போது, பலர் அப்பெண்ணை கட்டையால், டயரால் அடித்தனர். இந்த கொடூர காட்சியை, அந்த கூட்டத்தில் இருந்த ‘நல்ல மனிதர்’ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதை பார்த்ததும் போலீஸ் கிராமத்துக்கு விரைந்தது. ஜீத்து, அவருடைய பெற்றோர் உட்பட 5 பேரை கைது செய்தனர். இன்னும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களுக்கும் ‘காப்புக்கட்ட’ போலீஸ் தேடி வருகிறது.

Related Stories: