அயர்லாந்துடன் முதல் ஒருநாள் எளிதாக வென்றது இங்கிலாந்து

சவுத்தாம்ப்டன்: அயர்லாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ரோஸ் பவுல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. அயர்லாந்து அணி 44.4 ஓவரில் 172 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. கேம்பர் அதிகபட்சமாக 59 ரன் (118 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மெக்பிரைன் 40, டெலனி, கெவின் ஓ பிரையன் தலா 22 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் டேவிட் வில்லி 5, சாகிப் மகமூத் 2, அடில் ரஷித், டாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, 27.5 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.

ஜேசன் ராய் 24, ஜேம்ஸ் வின்ஸ் 25, பேர்ஸ்டோ 2, பான்டன் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சாம் பில்லிங்ஸ் 67 ரன் (54 பந்து, 11 பவுண்டரி), கேப்டன் மோர்கன் 36 ரன்னுடன் (40 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டேவிட் வில்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இதே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

Related Stories: