×

ஊரடங்கில் விற்பனை செய்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை பிஎஸ்-4 வாகன பதிவுக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் வாகன விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் முடிவை அறிவிக்கும் வரை, பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுவை குறைக்கும் வகையில், பிஎஸ் 4 தர நிலையிலான வாகனங்களில் இருந்து, பிஎஸ் 6 தரத்துக்கு மாற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, பிஎஸ்4 வாகன விற்பனைக்கான அவகாசம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பிஎஸ் 6 வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு விட்டது.

 இதனால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏற்கெனவே உற்பத்தி செய்த பிஎஸ்4 வாகனங்கள் விற்பனையாகாமல் டீலர்களிடம் தேங்கின. தேங்கியுள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்ய கூடுதல் அவகாசம் வழங்கி அனுமதிக்க வேண்டும் என முறையீடு செய்தனர். இதையடுத்து, ஊரடங்கிற்கு பிறகு 10 நாட்களுக்கு பிஎஸ் 4 வாகனங்களை விற்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதோடு, அதிகபட்சமாக 1.05 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. ஆனால், டீலர்கள் இந்த இலக்கை மீறி 2.25 லட்சம் வாகனங்களை ஊரடங்கில் விற்பனை செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், இந்த வாகன பதிவுக்கான தடையை ஜூலை 8ம் தேதி வரை நீட்டிப்பு செய்தது.

அதிக வாகன விற்பனை முறைகேடாக நடந்துள்ளதாக சந்தேகத்தை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு அனுமதியின்றி இந்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தது.  இதைத்தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் எத்தனை வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன என்ற விவரத்தை ஆட்டோமொபைல் டீலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. வாகனங்கள் விற்பனை செய்ய கூடுதலாக வழங்கப்பட்ட 10 நாள் அனுமதிக்கான உத்தரவையும் திரும்பப் பெற்றது. கடந்த 24ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விற்காமல் தேங்கிய வாகனங்களை வேறு நாடுகளுக்கு அனுப்ப, நிறுவனங்களிடம் இவற்றை ஒப்படைக்க அனுமதிக்குமாறு டீலர்கள் கோரினர். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

 இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான தடையை நீட்டிப்பதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Supreme Court ,court ,PS , Curfew, Court, PS-4 Vehicle Registration, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...