×

கொரோனாவால் ஏழைகள் படும் அவஸ்தை குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக தாலியை வைத்து டிவி வாங்கிய தாய்

கதக்: தனது குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக, ஒரு ஏழைத்தாய் தனது தாலியை அடகு வைத்து டிவி வாங்கிய கொடுமை கர்நாடகாவில் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் செய்து வரும் கொடுமையால், நாட்டில் பல கோடி ஏழைகள் வேலையை இழந்து, வருமானம் இன்றி வாடி வருகின்றனர். மாநில அரசுகள் தரும் இலவச ரேஷன் பொருட்கள், சொற்ப நிதியை வைத்தும், சிறுசிறு வேலைகள் செய்தும் ஒருவேளை வயிற்றைக் கழுவும் இதுபோன்ற ஏழைகளின் குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வி கிடைப்பது என்பது அரிதான ஒன்று. கொரோனா வருவதற்கு முன்பாக, ஏதோ ஒரு கிராமத்து அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிட்டு, படித்து கொண்டிருந்த ஏழை குழந்தைகளுக்கு, ‘ஆன்லைன் கல்வி’ என்ற பெரிய பேய் வந்துள்ளது. இதுவும், கொரோனா தந்த பரிசுதான்.

ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு பல மாதங்களாகி விட்டன. இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாழாகிக் கொண்டிருக்கிறது. இதை தடுப்பதற்காக, ‘ஆன்லைன் கல்வி’ என்ற திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. வீட்டில் இருந்தபடியே செல்போன், டிவி மூலம் பாடம் கற்பதே ஆன்லைன் கல்வி. ஆனால், இதற்கு டிவியோ அல்லது ஆன்டிராய்டு செல்போனோ தேவை. ஏழைகளுக்கு இவை எட்டாக்கனிதான். சில குடும்பங்கள் இதை கனவில்தான் வாங்க முடியும். இந்நிலையில், தனது குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்காக, ஒரு ஏழைத்தாய் தனது தாலியை அடமானம் வைத்து டிவி வாங்கிக் கொடுத்த கொடுமையான சம்பவம், கர்நாடகாவில் நடந்துள்ளது.  அப்பெண்ணின் பெயர் கஸ்தூரி.

கதக் மாவட்டம், நரகுந்த  தாலுகாவில் உள்ள ரட்டேரநாகனூரு கிராமத்தை சேர்ந்தவர். இது பற்றிய செய்தி, கர்நாடகாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை கேள்விப்பட்ட கர்நாடகா அமைச்சர் சி.சி.பாட்டீல், அப்பெண் அடமானம் வைத்த தாலி மீட்டு கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘கல்விக்காக  தாலியை அடகு வைத்து புதிய டிவி.  வாங்கியுள்ள பெண்ணின் தியாகம்  போற்றுதற்குரியது. அவர் அடகு வைத்த தாலியை விரைவில் மீட்டு அவரிடம்  ஒப்படைக்கப்படும். அதேபோல் அவரது குழந்தைகளின் கல்வி செலவை முழுமையாக  நானே ஏற்றுக் கொள்கிறேன்,’’ என்றார். இதற்கிடையே, தகவலறிந்த அடமானம் பெற்ற நபரே தாலியை கஸ்தூரியிடம் நேற்று திருப்பி கொடுத்துள்ளார்.


Tags : Tali ,children , Corona, poor, children, online education, Tali, Thai
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்