×

தேர்தல் முடிவை அறிய பல வாரங்கள், மாதங்கள் காத்திருக்க விரும்பவில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தி

வாஷிங்டன்: அதிபர் தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் விரும்புவதாக வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார். ஆனால், ‘தேர்தல் முடிவுக்காக பல மாதங்கள் காத்திருக்க விரும்பவில்லை,’ என அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இருப்பினும், அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி திட்டமிடப்படி நடத்தப்பட உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக, தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் களமிறங்கி உள்ளார். இதில், டிரம்ப்பின்  தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தபால் மூலம் வாக்குகளை அளிக்கும்படி மக்களை ஜனநாயக கட்சி வலியுறுத்தி வருகிறது. மேலும், நோய் அபாயத்தால் வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்வது, வரிசையில் நிற்பதை மக்கள் தவிர்த்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இதனால், 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தபால் மூலமே வாக்குகளை செலுத்துவார்கள் என கருதப்படுகிறது. அதே நேரம், தபால் வாக்கு மூலம் தேர்தல் நடந்தால் முறைகேடுகள் நடைபெறும் சாத்தியம் அதிகம் உள்ளதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

இதனால், ‘மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் காலம் வரும் வரையில், தேர்தலை தள்ளி வைக்கலாமா? என டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டார். இதை, தோல்வி பயத்தால் டிரம்ப் கூறுவதாக ஜனநாயக கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.  இந்நிலையில், டிரம்ப் தனது கருத்தில் இருந்து நேற்று திடீரென பின்வாங்கினார். இது பற்றி அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் தாமதமாவதை நான் விரும்பவில்லை. திட்டமிட்டப்படி, தேர்தலை நடத்தவே விரும்புகிறேன். ஆனால், அதன் முடிவுகளுக்காக பல வாரங்கள், பல மாதங்கள் காத்திருக்க விரும்பவில்லை. பின்னர், வாக்குப்பெட்டிகளை கண்டுபிடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி நடந்தால், தேர்தல் என்பதே அர்த்தமில்லாமல் போகும்,” என்றார்.

எவ்வளவோ பார்த்துட்டோம்...தலைவர்கள் கருத்து
தெற்கு கரோலினா, குடியரசு கட்சியின் செனட் நீதித்துறை தலைவர் லின்சே கிரகாம்: தேர்தலை தள்ளிவைக்கலாம் என்ற டிரம்ப்பின் யோசனை சரியல்ல. ஆனால், தபால் வாக்குகள் பற்றிய அவருடைய கவலை ஏற்கக் கூடியதுதான். ஜனநாயக கட்சி செனட் எம்பி விப் செனட்டர் ஜான் துனே:  டிரம்ப் என்ன சொன்னாலும் நவம்பரில் தேர்தல் நடைபெறும். இது, ஊடகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக டிரம்ப் செய்த செயலாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

செனட்டர் லாமர் அலெக்சாண்டர்: போர்களின் போதும், நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்தபோதும் கூட தேர்தல் நடந்துள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி: மக்கள் வாக்களிக்கும் நாளை தீர்மானிப்பதற்கு நாடாளுமன்ற மேலவைக்கு அதிகாரம் உள்ளது. எனவே, திட்டமிட்டப்படி தேர்தல் நடக்கும்.

ஐநா பொதுச்சபை கூட்டத்தில் டிரம்ப் ட்டுமே நேரில் உரை:
ஐநா சபை தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு, அடுத்த மாதம் நியூயார்க்கில் ஐநா பொதுச்சபையின் 75வது ஆண்டு கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே, தலைவர்கள் தங்கள் உரைகளை வீடியோ பதிவாக சமர்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 22ம் தேதி நடைபெற உள்ள பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டுமே நியூயார்க் செல்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. அதனால், அவர் மட்டுமே இக்கூட்டத்தில் நேரில் பங்கேற்க இருப்பதாக ஐநா.வுக்கான அமெரிக்க தூதர் நேற்று தெரிவித்தார். வரும் நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், டிரம்ப் தனது பதவிக் காலத்தில் ஐநா.வில் ஆற்ற உள்ள உரை இதுவாகத் தான் இருக்கும். ஐநா.வின் 75ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பொதுச்சபை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


Tags : Trump ,US ,election , Election results, months, US President Trump
× RELATED வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க...