×

கொரோனா ஊரடங்கால் கடும் நிதி நெருக்கடி சொத்துக்களை விற்க தயாராகிறது மத்திய அரசு

* விவரம் சேகரிக்க தேசிய நில மேலாண்மை நிறுவனம் அமைக்கிறது
* உபரி நிலங்களை கண்டறிந்து விற்று காசு பார்க்க திட்டம்
* நிலங்களை கணக்கெடுக்க தேசிய நில மேலாண்மை கழகம் அமைக்க முடிவு.
* இந்த கழகம் நாடு முழுவதும் மத்திய அரசுக்கும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமான நிலங்களை கணக்கெடுக்கும்.
* பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை உடனடியாக விற்கவோ, நீண்ட கால குத்தகைக்கு விடவோ திட்டம்.
* இந்த நிலங்கள் பொது பயன்பாட்டுக்காக மாநில அரசுகளால் இலவசமாகவோ, குறைந்த விலைக்கு தரப்பட்டவை.
* அதை விற்காமல், மாநில அரசுகளுக்கே திருப்பி தருவதுதான் சரி என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
* சொத்துக்களை விற்க மாநில அரசுகளும்  எதிர்ப்பு தெரிவிக்கும். தொழிற்சங்கங்களும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு.
* மத்திய  அமைச்சகங்கள் 52 , பொதுத் துறை நிறுவனங்கள் 384 உள்ளன.
* 13.50 லட்சம் ஹெட்டேர் நிலம் மத்திய அரசுக்கு உள்ளதாக 10 ஆண்டுக்கு முந்தைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
* உண்மையில் இதைவிட பல மடங்கு நிலம் அரசிடம் உள்ளது.
* பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ள உபரி சொத்துக்களின் மதிப்பு மட்டுமே ₹37 ஆயிரம் கோடி.
* ரயில்வேயிடம் 4.23 லட்சம் ஹெக்டேர், ராணுவத்திடம் 7.11 லட்சம் ஹெக்டேர், 13 பெரிய துறைமுகங்களில் 31 ஆயிரம் ஹெக்டேர், விமான நிலையங்கள் ஆணையத்திடம் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.

புதுடெல்லி:  மத்திய அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்து விவரங்களை சேகரிக்க தேசிய நில மேலாண்மை நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிறுவனத்தின் கணக்கெடுப்பு பணிகள் முடிந்ததும், கூடுதலாக அரசு வசம் உள்ள நிலத்தை தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கால் பொருளாதார மந்தநிலை. மக்களிடம் மட்டுமல்ல மத்திய, மாநில அரசுகளிடமும் கையில் காசு இல்லை. வெறும் கையால் முழம்போட முடியுமா? நம் வீடாக இருந்தால் முதலில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட முதலீடுகள் அடகு கடைக்கோ, வங்கிக்கோ போகும். அதிக நெருக்கடி என்றால் விற்கப்பட்டுவிடும். வீடு, நிலம் போன்றவற்றுக்கும் அதே நிலைதான். தனி மனிதனுக்கே இப்படியென்றால் 135 கோடி மக்களை ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் நிலை இன்னும் பரிதாபம்.

மத்திய அரசு, 52 அமைச்சகங்கள், 384 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், 31 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 10.3 லட்சம் பேர் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என நாடு முழுவதும் பரந்து விரிந்து ஆட்சி அதிகாரத்தை செலுத்தி வருகிறது. வருமானம் பல லட்சம் கோடியாக இருந்தாலும், செலவோ அதைவிட அதிகம். கடன் வாங்கி ஈடுகட்டி வருகிறார்கள். இப்போது, கொரோனாவால் புதுப்புது நெருக்கடிகளில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு, வருவாய் ஆதாரத்தை பெருக்க பல திட்டங்களை வகுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருக்கும் நிலங்களை விற்பது.  இதற்கான முன்னேற்பாடுகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்களில் பரப்பளவு எவ்வளவு? எங்கெல்லாம் நிலம் இருக்கிறது? என்ற விவரம் கூட அரசிடம் இதுவரை முழுமையாக இல்லை.

கடந்த 2016ல் முதல் முறையாக அரசு நிலங்களை கணக்கெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அரசு நில தகவல் அமைப்பு என்று நிறுவனம் ஒன்றை துவங்கி கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. ஆனாலும், இந்த பணிகள் முழுமையடையவில்லை. இப்போது, பணத் தேவை கையை கடிக்கத் துவங்கியுள்ள நிலையில் கணக்கெடுப்பை மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த நிலையில் தேசிய நில மேலாண்மை கழகம் என்ற புதிய அமைப்பு உதயமாக உள்ளது. இந்த தேசிய நில மேலாண்மை கழகம் நாடு முழுவதும் மத்திய அரசுக்கும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களுக்கும் எவ்வளவு நிலம் எங்கெங்கு உள்ளது என்பதை உடனடியாக கணக்கெடுக்க துவங்க உள்ளது. ரயில்வே, பாதுகாப்பு துறை நிலங்களை இந்நிறுவனம் கணக்கெடுக்காது.

தற்போது, பயன்பாட்டில் உள்ள நிலங்கள், பயன்படுத்தப்படாமல் சும்மா கிடக்கும் நிலங்கள் என்று ரகம் பிரித்து பட்டியலிடுவதுதான் இந்த நிறுவனத்தின் முதல் வேலை. அடுத்ததாக, பயன்பாடின்றி சும்மா கிடக்கும் கூடுதல் நிலங்களில் எதையெல்லாம் உடனடியாக பயன்படுத்தி காசு பார்க்க முடியும் என்பதை அந்த நிறுவனம் ஆராய உள்ளது.
அந்த நிலத்தை விற்பது, நீண்ட கால குத்தகைக்கு விடுவது, வாடகைக்கு விடுவது, தனியாருடன் இணைந்து கட்டிடம் கட்டி லாபம் பார்ப்பது ஆகியவற்றில் எது சாத்தியம் என்பதை அந்த நிறுவன அதிகாரிகள் முடிவு செய்வார்களாம். அவர்கள் முடிவே இறுதியானது. அப்புறம் என்ன? சட்டுபுட்டுன்னு தனியாருக்கு நிலத்தை கைமாற்றி விட வேண்டியதுதான்.

சென்னை போன்ற பெரிய நகரங்கள் துவங்கி குக்கிராமங்கள் வரை மத்திய அரசு சொத்துக்கள் உண்டு. பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனத்துக்கு தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், பெரிய கிராமங்களி–்லும் சொத்து உள்ளது. பெரும்பாலான நகரங்களின் மையப்பகுதியில்தான் இந்த சொத்து இருக்கும். இதேபோல், துறைமுகங்கள், விமானநிலையங்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு சொத்து ஏராளம். பெரு நகரங்களில் ஊழியர்களின் குடியிருப்பு கட்டிடங்கள் ஏராளம். பல ஏக்கர் பரப்பளவில்தான் இந்த குடியிருப்புகள் அமையும். அதில் கட்டிடம் ஒரு சிறிய பகுதியில்தான் இருக்கும். காலியிடம் தாராளமாக கிடக்கும். இதுபோன்ற இடங்கள் மீதுதான் தேசிய நில மேலாண்மை கழகத்தின் கண் விழப்போகிறது.  அதேபோல், ரயில்வே, பாதுகாப்பு துறை வசம் உள்ள நிலங்களில் இருந்து வருமானம் பார்க்கவும் தனி முயற்சிகள் நடக்கிறது.

இன்று மத்திய அரசுக்கு சொந்தமான நிலம் என்று கூறி, விற்கப்பட உள்ள நிலங்களில் பெரும்பாலானவை, அந்தந்த மாநில அரசுகளால் இலவசமாகவோ, மிக குறைந்த விலைக்கோ மத்திய அரசுக்கு தரப்பட்டவை. அதை விற்று காசாக்க நினைப்பது பெரும் குற்றம். அந்த நிலங்கள் ஒரு குறிப்பிட்ட பொது பயன்பாட்டுக்காக மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்டவை. அதை விற்கக் கூடாது. தேவையில்லை என்றால் அந்தந்த மாநில அரசுகளிடமே திருப்பித் தரவேண்டும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இதனால் மத்திய அரசின் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட மாநில அரசுகள் முயற்சிக்கும் என்று தெரிகிறது. அதேபோல் தொழிற்சங்கங்களும் தங்கள் எதிர்ப்பு குரலை பதிவு செய்யத் துவங்கி உள்ளது.

எவ்வளவு சொத்து என அரசுக்கே தெரியாது
தனி நபர் ஒருவர் தனக்கு சொந்தமான சொத்து விவரங்கள் தெரியாது என்று வருமான வரித்துறையிடம் சொன்னால், அது பொய் என கருதப்பட்டு தண்டனை விதிக்கப்படும். ஆனால், அப்படி அபராதம் விதிக்கும் அரசுக்க தனக்கு எவ்வளவு நிலம் சொந்தம்  என்பது தெரியாது என்பது கசப்பான உண்மை. மத்திய அரசுக்கு 13.50 லட்சம் ஹெக்டேர் நிலம் சொந்தம் என்று கடந்த 2010/11ம் ஆண்டுக்கான மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி(சிஏஜி) அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இந்த புள்ளிவிவரம் தவறானது இதைவிட பல மடங்கு நிலம் அரசுக்கு சொந்தமானது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.



Tags : government ,Corona ,crisis , Corona, Curfew, Federal Government
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...