×

குதிரை பேரத்தில் கோடி ேகாடியாய் விலை எகிறுவதால் ஜெய்ப்பூரில் இருந்து ஜெய்சல்மாருக்கு காங். எம்எல்ஏ.க்கள் திடீர் இடமாற்றம்

* 3 குட்டி ரக விமானங்களில் பறந்தனர்; ராஜஸ்தானில் பதற்றத்தில் ஆளுங்கட்சி

ஜெய்ப்பூர்: குதிரை பேரத்தில் எம்எல்ஏ.க்கள் விலை கோடி ேகாடியாக எகிறிக் கொண்டிருப்பதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் கெலாட்  கூறியிருந்த நிலையில், அக்கட்சி எம்எல்ஏ.க்கள் நேற்று அவசர அவசரமாக ஜெய்ப்பூர் ஓட்டலில் இருந்து ஜெய்சல்மாருக்கு மாற்றப்பட்டனர். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆட்சியை தக்க வைக்க கடந்த ஒருமாதமாக போராடிக் கொண்டிருக்கிறது. ஆளுநர் போட்ட முட்டுக்கட்டையில் இருந்து தப்பி, வரும் 14ம் தேதி சட்டப்பேரவையை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆனாலும், அதுவரை தனது எம்எல்ஏ.க்களை தக்க வைக்க வேண்டிய நெருக்கடியில் காங்கிரஸ் உள்ளது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதால், பாஜ.வின் குதிரைப் பேரத்தில் எம்எல்ஏ.க்களின் விலை கணக்கு வழக்கில்லாமல் கோடி கோடியாக எகிறி விட்டதாக முதல்வர் கெலாட் நேற்று குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு கட்சி எம்எல்ஏ.க்கள் நேற்று அவசர அவசரமாக சிறிய ரக விமானம் மூலம் ராஜஸ்தானின் ஜெய்சல்மாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதல்கட்டமாக, 3 விமானங்களில் 54 எம்எல்ஏ.க்கள் அனுப்பப்பட்ட நிலையில், 2ம் கட்டமாக மீதமுள்ள எம்எல்ஏக்கள் அழைத்துச் செல்லப்பட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இதை கிண்டலடித்துள்ள அம்மாநில பாஜ தலைவர் சதிஷ் புனியா, ‘‘ஜெய்சல்மாருக்கு அடுத்து பாகிஸ்தான் இருக்கிறது.

இன்னொருபுறம் குஜராத் (பாஜ ஆளும் மாநிலம்) இருக்கிறது. ஆகவே, அடுத்து எங்கு செல்லப் போகிறீர்கள்? முதல்வர் முதலில் தனது எம்எல்ஏ.க்களை சுதந்திரமாக விட வேண்டும்,’’ என கூறி உள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை வளைப்பதற்கு கழுகு போல் பாஜ தலைவர்கள் சுற்றி வருவதால், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசின் நிலைமை தினமும் கத்தி மேல் நடக்கும் நிலைமையாகவே இருந்து வருகிறது.

கொறடா மேல்முறையீடு
சச்சின் பைலட் மற்றும் அவருடைய ஆதரவு எம்எல்ஏ.க்கள் 18 பேர் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சபாநாயகர் சி.பி.ஜோஷிக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜஸ்தான் சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடா மகேஷ் ஜோஷி நேற்று மேல்முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் இல்லை. எனவே,  உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’ என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு  திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சபாநாயகர் ஜோஷி வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியானாவில் அலைக்கழிக்கப்பட்ட ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார்
சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் பாஜ ஆளும் அரியானா மாநிலத்தில் உள்ள ஓட்டலில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் 2 எம்எல்ஏ.க்களான பன்வாரிலால் சர்மா, விஷ்வேந்திர சிங் ஆகியோர், ஆட்சியை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டதாக 2 ஆடியோ டேப்களை காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டது. அதன் அடிப்படையில், அவர்கள் மீது ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கான விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த 2 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் தர ராஜஸ்தான் போலீசார் நேற்று அரியானாவின் குர்கான், மனேசர் பகுதியில் உள்ள 3 ஓட்டல்களுக்கு சென்றனர். அதில் 2 ஓட்டல்களில் அதிருப்தி எம்எல்ஏக்கள் இங்கில்லை என கூறியுள்ளனர். மற்றொரு ஓட்டல் மூடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 3 ஓட்டலிலும் போலீசாரை உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

ஒரு எம்எல்ஏ போனாலும்...
ராஜஸ்தான் சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 200. இதில், பெரும்பான்மையை நிரூபிக்க 101  எம்எல்ஏ.க்கள் ஆதரவு தேவை. தற்போது, கெலாட் அரசுக்கு 102 எம்எல்ஏ.க்கள்  ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இதில் ஒருவரை கூட பாஜ.விடம் இழந்து விடக்  கூடாது என்பதில் காங்கிரஸ் மிக கவனமாக செயல்படுகிறது. அதனால்தான், விமானங்கள் மூலம் நேற்று அவர்களை இடமாற்றியதாக கூறப்படுகிறது.


Tags : Jaisalmer ,Jaipur ,relocation , Jaipur, Jaisalmer, Congress MLA
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில்...