×

ஆந்திராவில் போதைக்கு அடிமை: சாராயத்துடன் சானிடைசர்கலந்து குடித்த 13 பேர் பலி: மதுபானம் கிடைக்காததால் பரிதாபம்

திருமலை:  ஆந்திராவில் கள்ளச்சாராயத்துடன் சானிடைசரை கலந்து குடித்த 13 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் மாநிலம் முழுவதும் விடியவிடிய பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திராவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் எப்போதும் இல்லாத அளவுக்கு 10 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு 1.30 லட்சமாக அதிகரித்தது. இதுதவிர,  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,281 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மதுக்கடைகளை அரசு மூடியுள்ளது.  பிரகாசம் மாவட்டம், தர்சி மண்டலத்தில் கடந்த 10 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மதுப்பிரியர்கள், போதைக்கு அடிமையான மாற்று வழியில் போதையை தேடுகின்றனர்.

இந்நிலையில், பிரகாசம் மாவட்டம், குரிச்சேடு கிராமத்தில் கொரோனா பரவல் தடுக்க, கடந்த 2 நாட்களாக  தன்னார்வலர்கள் வீடுவீடாக இலவச சானிடைசர்கள் வழங்கினர். அங்குள்ள கோயில் வெளியே பிச்சை எடுத்த 2 பேருக்கும் வழங்கினர். சானிடைசர் ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கப்படுவதால், அதை குடித்தால் போதை ஏறும் என சிலர் கருதினர். விபரீதத்தை அறியாமல் நேற்று முன்தினம் இரவு 2 பிச்சைக்காரர்கள், 11 கூலித்தொழிலாளர்கள் கள்ளச்சாராயத்தை வாங்கி, அதில் போதையை அதிகரிக்க சானிடைசரையும் கலந்து குடித்தனர். சிறிது நேரத்தில் 13 பேரும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்தனர்.

 அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 3 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, மற்ற 10 பேரும் அடுத்தடுத்து இறந்தனர். விசாரணையில், இறந்தவர்களின் பெயர்கள் சீனு (25), திருப்பதய்யா (37), ராமிரெட்டி (60), கெடியம் ரமணய்யா (30), ராஜாரெட்டி (65) பாபு (40), சார்லஸ் (45), அகத்தீன் (40) மற்றும் கோணகிரி ரமணய்யா (65) என தெரியவந்தது.  இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப்பிலும் 21 பேர் பலி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ், பட்டாலா, தரன் தரன் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் மக்கள் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் இவர்களுக்கு உடல்நிலை பாதித்தது. மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட இவர்களில் 21 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இச்சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்தும்படி முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

மதுபாட்டில் விலை 300% உயர்வு
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘ஆந்திராவில் மதுபாட்டில்களின் விலை 300 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக கள்ளச்சாராயம், போலி மது விற்பனை அதிகமாகி விட்டது. 13 பேர் இறந்த இச்சம்பவம், ஜெகன் மோகன் அரசின் கொள்ளை நடவடிக்கையால் நடந்துள்ளது,’’ என்றார்.



Tags : Andhra Pradesh , Andhra, drug, sanitizer, alcohol
× RELATED ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில்...