×

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் ஏற்கனவே திட்டமிட்டதை விட அழகாக இருக்கும்: கட்டிடக் கலைஞர் தகவல்

* கோயில் கோபுரத்தின்  உயரம் 141 அடிக்கு பதிலாக 161 அடியாக உயர்த்தப்படும்.
* 2 மண்டபங்களுக்கு பதிலாக 5  மண்டபங்கள் கட்டப்பட உள்ளன.
* கோயில் கருவறையின் மேலே,  மலை உச்சியை போன்ற ஷிகாரா கோபுரம் அமையும்.
* நாகரா பாணி கட்டிடக் கலையில் ராமர் கோயிலும் இருக்கும்.

அகமதாபாத்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கோயிலுக்கான வடிவமைப்பை தயாரித்திருப்பவர் சோம்புரா (77). இவரது குடும்பம் 200க்கும் மேற்பட்ட கோயில்களுக்கான வடிவமைப்புகளை உருவாக்கி இருக்கிறது. சோம்புராவின் மகன் கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புரா மேற்பார்வையில்தான், ராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நடக்க உள்ளன.கோயிலின் வடிவமைப்பு குறித்து சந்திரகாந்த் சோம்புரா கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன் திட்டமிட்டதைக் காட்டிலும், ராமர் கோயில் மிக பிரமாண்டமாக அமைய இருக்கிறது.  கோயிலில் உயரம், மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2 மண்டபங்களுக்கு பதிலாக 5 மண்டபங்கள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் கோபுரத்தின் உயரம் 141 அடிக்கு பதிலாக 161 அடியில் இருக்கும். கோயில் கருவறையின் மேலே, மலை உச்சியை போன்ற ஷிகாரா கோபுரம் இருக்கும். இதனால், ஏற்கனவே திட்டமிட்டதைக் காட்டிலும் ராமர் கோயில் இரண்டு மடங்கு பிரமாண்டமாகவும், கூடுதல் அழகுடனும் ஜொலிக்கும். இந்த மாற்றத்திற்கு காரணம், நிலப் பற்றாக்குறை இல்லை, ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதுதான். அடுத்த 3 ஆண்டில் கட்டுமான பணிகள் நிறைவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஏழுமலையான் கோயிலில் இருந்து புனித நீர், மண்
அயோத்தியில் நடக்கும் பூமி பூஜைக்காக நாடு முழுவதும் உள்ள புனித ஸ்தலங்களில் இருந்து புனித நீர், மண் சேகரித்து அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, கலியுக வைகுண்டமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் இருந்த புனித நீரும்,  திருமலையில் உள்ள புற்று மண்ணும் சேகரிக்கப்பட்டு நேற்று அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநில பாஜ பொதுச்செயலாளர் பானு பிரகாஷ் தலைமையில் இது நடந்தது.


Tags : Ram Temple ,Ayodhya , Ayodhya, Ram Temple, Architect
× RELATED அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை வங்கி கணக்கில் 6 லட்சம் மோசடி