×

கொரோனா பணியில் உள்ள டாக்டர், நர்சுகளுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘‘கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கான நிலுவை ஊதியத்தை அடுத்த ஒரு வாரத்தில் வழங்க வேண்டும்,’ என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று, உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவில், ‘கொரோனா நோயாளிகளை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு, பகல் பாராமல், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர்.

ஆனால், அவர்களுக்கு ஊதியம் வழங்காமல் பல்வேறு மாநில அரசுகள் இழுத்தடித்து வருகின்றன. இவர்களின் நலனை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. அதனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு, சில வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.
இதை சில வாரங்களுக்கு முன் விசாரித்த நீதிமன்றம், ‘மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்காவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படும். அவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும்,’ என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பு வாதத்தில், ‘நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பிறகு, மருத்துவர்களும், செவிலியர்களும் சில நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஆனால், இந்த நாட்களை விடுமுறையாக கருதி, அவர்களுக்கு சம்பளம் வழங்க மறுக்கப்படுகிறது,’ என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இப்பிரச்னையை குறித்து அரசுடன் ஆலோசிக்கப்படும்,’’ என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”கொரோனா காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு இதுநாள் வரையில் நிலுவையில் இருக்கும் அனைத்து ஊதியத்தையும், அடுத்த ஒரு வாரத்திற்குள் மாநில அரசுகள் வழங்க வேண்டும். இதை மத்திய அரசும் பின்பற்ற வேண்டும்,’’ என்று காட்டமாக தெரிவித்து,  விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : doctor ,nurses ,State Governments ,Action orders state governments ,Corona , Corona, Doctor, Salary, State Government
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்