பள்ளத்தில் விழுந்து பலியான வாலிபர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு

செய்யூர்: செய்யூர் அருகே தரைப்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து வாலிபர் இறந்தார். அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். செய்யூர் அடுத்த செங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (30). சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 28ம் தேதி மூர்த்தி, தந்தையை பார்க்க செங்காட்டூர் கிராமத்துக்கு வந்தார். அன்றிரவு இயற்கை உபாதை கழிக்க, தனது பைக்கில் செங்காட்டூர்- அனுமந்தபுரம் சாலையில் சென்றார். அப்போது, தரைப்பாலம் கட்டுவதற்காக, தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில், சாலைப்பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களின் அலட்சியமே அவரது இறப்புக்கு காரணம். அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி கிராம மக்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பவுஞ்சூரில் உள்ள, லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து, மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன், செய்யூர் இன்ஸ்பெக்டர் சின்னதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். இதனால் பொதுமக்கள், போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் பொதுமக்கள், பவுஞ்சூர் - கூவத்தூர் நெடுஞ்சாலைக்கு சென்று, அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், இறந்தவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரையில், சடலத்தை வாங்க மாட்டோம் என கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார், அவர்களை சமரசம் செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைதொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: