×

வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு, கண்ணை கட்டி தாசில்தார் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் உண்ணாவிரதம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மலைநகரை சேர்ந்தவர் சக்திவேல் (50). இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சக்திவேல், அதே பகுதியில் உள்ள அரசு   புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி 5 ஆண்டுகளாக வசிக்கிறார். இவரது வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு, பல ஆண்டுகளாக மின்வாரிய அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளார். பலமுறை அச்சிறுப்பாக்கம் மின்வாரிய அலுவலகம் அருகே மின் இணைப்பு கேட்டு போராட்டங்களும் நடத்தியுள்ளார். ஆனால், இதுவரை இவருக்கு மின்  இணைப்பு வழங்கப்படவில்லை.  இந்நிலையில் சக்திவேல், நேற்று தனது மனைவி மற்றும் மகள்களுடன் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் சென்றார். அங்கு, அலுவலகம் முன்பு குடும்பத்துடன் அமர்ந்து, கண்ணில் கருப்பு துணியை கட்டி, ராந்தல் விளக்கேற்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சக்திவேல் கூறுகையில், நான் வசிக்கும் பகுதியில், என்னை போல் பலரும் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகளை கட்டியுள்ளனர். அதில், பலருக்கு மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு கொடுத்துள்ளனர். ஆனால், எனக்கு தர மறுக்கின்றனர். இதனால், இரவு நேரங்களில் பாம்பு, பூச்சிகள் வீட்டுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே, மின் இணைப்பு வழங்க மதுராந்தகம் வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் கேட்டபோது, அரசு புறம்போக்கு நிலங்களில் மின் இணைப்பு வழங்க, தாசில்தார் என்ஓசி சான்றிதழ் வழங்க வேண்டும்.  என்ஓசி இல்லாததால், மின் இணைப்பு வழங்க முடியாத நிலை  உள்ளது’ என்றார். மதுராந்தகம் தாசில்தாரிடம் கேட்டதற்கு, இதற்கு, வருவாய் துறையினர் உரிய விசாரணை மேற்கொள்வார்கள்’ என தெரிவித்தார்.

Tags : waitress ,house ,office , Electrical connection, Tasildar office, fasting
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை