×

சோழவந்தான் அருகே அவலம்; சாலை பணிக்காக ஒரு மாதமாக கொட்டி கிடக்கும் ஜல்லிகற்கள்: பொதுமக்கள் அவதி

சோழவந்தான்: சோழவந்தான் அருகே ஜல்லிகள் கொட்டி ஒரு மாதமாகியும் சாலை போடாததால் பொது மக்கள் தினமும் விழுந்து காயமுற்று வருகின்றனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டியில் சுமார் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இங்கு பஸ் நிறுத்தம் முதல் காவல் நிலையம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்ததால் புதிய சாலை போட திட்டமிடப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன் சாலைப் பணிகள் துவங்கி ஜல்லிகள் மட்டும் கொட்டி குவித்து வைக்கப்பட்டது. பின்னர் உரிய காரணமின்றி சாலை போடும் பணியை நிறுத்தி விட்டனர். குறுகிய இந்த சாலையில் ஜல்லி கற்களை குவித்து இருப்பதால் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் இயலாமல் பொதுமக்கள் தினமும் அவதியுற்று வருகின்றனர்.

இது பற்றி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. எனவே பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளனர். இது குறித்து காடுபட்டி மக்கள் கூறுகையில்,‘‘பழுதான சாலையை சரி செய்வதாக கூறி பல லட்சம் திட்ட மதிப்பில் இந்த சாலை பணியை துவங்கினார்கள். ஜல்லிக் கற்களை மட்டும் கொட்டியதோடு, ஒரு மாதம் ஆகியும் இன்னும் தார்ச்சாலை போடும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால ஊர்திகளும் ஊருக்குள் வர இயலவில்லை. இது  காவல் நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலை என்பதால். அவசர புகார் கொடுக்க செல்பவர்கள் வாகனங்களில் செல்ல இயலவில்லை. நோயாளிகள், முதியோர்கள் ஊருக்குள் செல்ல,மெயின் ரோட்டிலிருந்து இறங்கி நடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.

மேலும் இவ்வழியே இருசக்கர வாகனங்களில் சென்று வருபவர்கள் நிலை தடுமாறி அடிக்கடி விழுந்து காயமடைந்து வருகின்றனர். ஊருக்கு நல்லது செய்வதாக கூறி சாலை போட ஆரம்பித்து அதை முழுமையாக செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டதால்,தற்போது பொதுமக்கள் தான் அதிகம் சிரமப்படுகிறோம். ஒன்றிய அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பல முறை இது குறித்து கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே விரைவில் இந்த சாலைப் பணிகளை முடிக்காவிட்டால், பொதுமக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம்,’’ என்றனர்.


Tags : Cholavanthan ,suffering , Cholavanthan, road work, gravel, avadi
× RELATED தேர்தல் பிரசாரம் விறுவிறு: டீக்கடைக்காரர்கள் `குஷி’